Published : 09 Oct 2023 04:06 AM
Last Updated : 09 Oct 2023 04:06 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
இந்த பேருந்து நிலையம் வருவதற்கு யார் காரணம் என்பது தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் கட்டப்பட்டது என கூறி பாஜகவினர் சிலர் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தின் பெயர் பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஒட்டினர். இதையறிந்து அங்கு வந்த திமுகவினர் பிரதமரின் புகைப்படத்தை கிழித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் மற்றும் நேற்று திறக்கப்பட்ட ஸ்டெம் பார்க் ஆகியவை மத்திய அரசின் நிதியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என தெரிவித்து பாஜக சார்பில் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டது.
அதிமுக சுவரொட்டி
இந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டியது முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி தான். எனவே இந்த பேருந்து நிலையம் வருவதற்கு அதிமுகவே காரணம் எனக் கூறி அதிமுக சார்பில் சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த விவகாரம் முக்கிய விவாதமாக மாறியது. விழாவில் கனிமொழி எம்பி பேசும்பாது, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய கட்டுமானப் பணியை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று பலமுறை ஆய்வு செய்து உள்ளோம். இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இங்கேயும் சில பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எந்த திட்டமும் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. எல்லா திட்டத்திலும் மாநில அரசின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதில் எங்கள் உழைப்பு உள்ளது. நீங்கள் கொடுக்கும் பணமும் நாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி வரிப்பணம் தான். அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு பெயர் வைத்துக் கொள்கிறது. தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள். நிச்சயமாக எந்த மாற்றமும் இங்கு வராது. இங்கு எந்த குளத்திலும் தாமரை மலராது’’ என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘இந்த பேருந்து நிலையத்தில் சிலர் அவர்களின் கட்சி தலைவரின் படத்தை ஒட்டுகிறார்கள். எதிர்க் கட்சியினர் இந்த திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று கூறுகிறார்கள். கருணாநிதி கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றை அதிமுகவினர் திறந்து வைத்தார்கள். அப்போது நாங்கள் தான் திறப்போம் என்று சொல்லவில்லை.
எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அவர்கள் தான் திறந்து வைப்பார்கள். 8 ஆண்டுகளாக அதிமுகவினர் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அவர்களால் முடிக்க முடியவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 80 சதவீதம் பணிகளை முடித்துள்ளோம்’’ என்றார்.
அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ‘‘தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொறாமையடைந்த எதிர்க்கட்சியினர் ஏதாவது குறைகூறிக் கொண்டு தான் இருப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடிக்கு ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. சாலைகள் குறுகலாக அமைக்கப்பட்டு வந்தன. அதனை மாற்றி சாலைகளை விரிவுபடுத்தி உள்ளோம்.
அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடுதல் நிதி பெற்று பணிகளை நிறைவேற்றி உள்ளோம். இதே போல் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்து உள்ளது. இதற்கு முழுமையாக இடம் தேர்வு செய்து, நாம் தான் கட்டி முடித்து உள்ளோம். இந்த திட்டங்களை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று வேறு யாரும் உரிமை கோர முடியாது’’ என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, ‘‘தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.950 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் அதிமுக ஆட்சியில் ரூ.100 கோடி அளவுக்கு கூட பணிகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர், கனிமொழி எம்பி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சர்களின் முயற்சியால் தான் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT