Published : 08 Oct 2023 05:22 PM
Last Updated : 08 Oct 2023 05:22 PM
ஓசூர்: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 தொழிலாளர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அத்திப்பள்ளி போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
தீபாவளி பட்டாசு விற்பனை: கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி முதல் தமிழக எல்லை ஜூஜூவாடி முதல் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி சீசன் பண்டிகை நெறுங்கும்போது, இப்பகுதியில் உள்ள பட்டாசு கடை வைத்துள்ளவர்கள், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆர்டர் செய்து லாரிகளில் கொண்டு வந்து பட்டாசுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்வது வழக்கம். இந்த சீசன் சமயங்களில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் பட்டாசு கடைகளில் வந்து பட்டாசுகளை பிரித்து அதனை பேக் செய்வதும்,விற்பனை செய்யும் பணியிலும் ஈடுப்படுவர்.
அதேபோல் இந்த ஆண்டு தீபாவாளியையொட்டி தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் ராமசாமி ரெட்டி என்பவர் பெயரில் அவரது மகன் நவீன் என்பவர் பட்டாசு கடை வைத்துள்ளார். அந்த பட்டாசு கடையில் தீபாவளி பண்டிகை சீசனுக்காக மேலும் ஒரு பட்டாசு கடையை திறந்து அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், கள்ளகுறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த 10 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் என 22 பேர் பணி செய்து வந்தனர்.
பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து:இந்நிலையில் சிவகாசியில் இருந்து ஒரு கண்டெயினர் லாரி, 2மினி சரக்கு லாரி என 3 வாகனங்களில் பட்டாசுகளை சனிக்கிழமை கொண்டு வந்தனர். இதில் கண்டெயினர் லாரியில் இருந்த பட்டாசுகளை தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக பட்டாசு வெடித்து சிதறியதால் பட்டாசு கடை அருகே இருந்த கடைகளிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி மற்றும் அதன் சுற்றி உள்ள 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.
13 பேர் பலியான சோகம்: ஆனால் தீ கட்டுக்கொள் வராமல் எரிந்துகொண்டே இருந்ததால் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள்ள கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்ட 7 பேர் காயத்துடன் தப்பினர். மேலும் தீவிபத்தில் சிக்கிக்கொண்ட தருமபுரி மாவட்டம் டி.அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன்,25. ஆதிகேசன்,23. விஜயராகவஜன்,20. இளம்பருதி,19.ஆகாஷ்,23.கிரி,22.சச்சின்,22 ஆகிய 7 பேர், திருவண்ணாமலை மாவட்டம் நீபத்துறையை சேர்ந்த பிரகாஷ்,20. கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், வாணியம்பாடியை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
14-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: இறந்தவர்களின் உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த ஓசூரை சேர்ந்த அந்தோணி பால்ராஜ் (30) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி ஆட்சியர் சரயு, ஓசூர் உதவி ஆட்சியர் சரண்யா, எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் இறந்தவர்களின் உடல்களுக்கு மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி தமிழக அரசு அறிவித்த ரூ, 3லட்சம் நிவாரணம் தொகை வழங்கப்பட்டது.
உடல்கள் ஒப்படைப்பு: இதன்பின்னர், இன்று பகல் 12 மணிக்கு இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் ஆம்புலன்சில் ஏற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆம்புலன்சுகளில் உடல்களை அனுப்பும் போது நீபத்துறை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் தமிழர்கள் இறந்துள்ளதால், கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆறுதல் கூற யாரும் வரவில்லை. இதனை கண்டிக்கிறோம் எனக்கூறி ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கர்நாடக மற்றும் தமிழக போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் உறவினர்கள் கண்ணீருடன் உடல்களை பெற்று கொண்டு சென்றனர்.
இருவர் கைது: இறந்தவர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகள் தீபவாளி சீசனுக்காக வேலைக்காக வந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி ஆகிய இருவரையும் அத்திப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். இது குறித்து கர்நாடக போலீஸார் கூறும்போது,"விபத்துக்குளான பட்டாசு கடையின் பின்புறம் அனுமதியின்றி குடேன் வைத்துள்ளனர். மேலும் சிறிய அறைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும் ஆனால் ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அடுக்கி வைத்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு" என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT