Published : 08 Oct 2023 05:14 PM
Last Updated : 08 Oct 2023 05:14 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன். மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இது புதுச்சேரி ஆளும் கட்சி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அந்தஸக்காக அனைத்து கட்சி எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப் பேரவையில் தீர்மனம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தோம். மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என கூறியுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மாநில அந்தஸ்து சம்பந்தமாக அனைத்து கட்சி எம்எல்ஏக்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை கண்டிப்பாக சந்திப்பேன். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிளை சேர்த்துத்தான் புதுச்சேரி மாநில அந்தஸ்து கேட்போம். மீண்டும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவேன்.
மாநில அந்தஸ்து கேட்பது நம்முடைய உரிமை. அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம். முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான் இருக்கும். கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு பிரச்னையோடு இருந்தார்கள் என்று தெரியும். கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மத்தியில் அவர்களது ஆட்சி இருந்தபோது கூட மாநில அந்தஸ்து வாங்கி இருக்கலாம். எனக்காக மட்டும் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. மாநில வளர்ச்சிக்காகவும், விரைவாக மக்களுக்கு பணியாற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன். மாநில அந்தஸ்து கிடைத்தால் விரைவாக திட்டத்தை செயல்படுத்த கூடிய நிலை ஏற்படும். தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் இருக்கும். பத்திரப்பதிவு துறையில் யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை ஒவ்வொரு பகுதியாக கொடுத்து வருகிறோம். புதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்கவும் வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுத்திக் கொண்டே இருப்போம்.
சிறப்பு நிதியும் மத்திய அரசிடமிருந்து வரும். புதிதாக சட்டப்பேரவை கட்டவும் நிதி கேட்டுள்ளோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நாங்கள் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். பிள்ளைகளுக்கு ஒரு மாதத்தில் மடிக்கணினி கொடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தருமாறு மத்திய அரசிடம் கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT