Published : 08 Oct 2023 05:35 PM
Last Updated : 08 Oct 2023 05:35 PM
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், மயிலாடும்பாறையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்டத்துக்குச் செல்ல மலைச்சாலை உள்ளது. ஆனால் குறுகிய சாலையாக உள்ளதால், இப்பகுதி கிராம மக்கள் 70 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் கடமலை - மயிலை ஒன்றியம் உள்ளது. இங்கு, ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், எட்டப்பராஜபுரம், மயிலாடும்பாறை, குமணந்தொழு, மந்திச்சுனை, மூலக்கடை, முருக்கோடை, முத்தாலம் பாறை, நரியூத்து, பாலூத்து, பொன்னன் படுகை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு இலவம், முந்திரி மற்றும் காய்கறி பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இக்கிராமங்கள் இருந்தாலும், மதுரை மாவட்டத்துக்குச் செல்வதற்கான தூரம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, மயிலாடும்பாறையிலிருந்து 21 கி.மீ.தொலைவில் மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.கல்லுப்பட்டி அமைந்துள்ளது.
இதற்கு, மல்லப்புரம் மலை வழியே 15 அடி அகல சாலையில் செல்ல வேண்டும். ஆனால், இச்சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், குறுகிய சாலை என்பதால் இரு சக்கர வாகனம், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.
மற்ற வாகனங்கள் எல்லாம் கடமலைக்குண்டு, கண்டமனூர், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக சுமார் 70 கிமீ.சுற்றி மதுரைக்குச் செல்கின்றன. இதனால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. மல்லப்புரம் மலைச் சாலையைப் பொருத்தளவில், ஒரு பக்கம் பள்ளத்தாக்கும், மறுபக்கம் ராட்சத கற்பாறைகளுமாக உள்ளன. இதனால் பலரும் பகலில் மட்டுமே இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையை அகலப்படுத்துவதன் மூலம், இரு மாவட்டப் போக்குவரத்தும் எளிதாகும். பயண நேரமும் வெகுவாய் குறையும். இது குறித்து இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால் குறைந்த நேரத்தில் அண்டை மாவட்டத்துக்குச் செல்ல வசதி இருந்தும், சுற்றிச் செல்லும் நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுப் போக்குவரத்தையும் தொடங்க முடியாத நிலை உள்ளது.
இது குறித்து மந்திச் சுனையைச் சேர்ந்த முனியாண்டி என்ற விவசாயி கூறுகையில், ‘தேனியை விட மதுரை காய்கறி மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைக்கிறது. ஆனால், போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம், ஆட்டோவில் குறைந்த அளவே விளைபொருட்களை கொண்டு செல்ல முடிகிறது.
மேலும், மருத்துவம், கல்வி என பலரும் மதுரை மாவட்டத்துக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் பேருந்து போக்குவரத்து இல்லாததால், பல ஆண்டுகளாக பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம்’ என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ‘இது மலைப் பகுதி என்பதால் சாலையை விரிவுபடுத்தவோ, சீரமைக்கவோ வனத்துறையினர் எளிதில் அனுமதி அளிப்பதில்லை. அதனால் அவ்வப்போது சீரமைப்புப் பணிகளை மட்டுமே செய்து வருகிறோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT