Published : 08 Oct 2023 03:05 PM
Last Updated : 08 Oct 2023 03:05 PM

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து | தலைவர்கள் இரங்கல்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவர்களுக்கான நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "கடந்த சில நாட்களாக பட்டாசு குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் முறையான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, இது போன்ற விபத்துகள் மேலும் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: "எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களை மிகுந்த கவனத்துடன், அரசின் விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும். சிறிய கவனக்குறைவும் விலை மதிக்கமுடியாத உயிர் போக நிறைய வாய்ப்புள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்ததை அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x