Published : 08 Oct 2023 02:17 PM
Last Updated : 08 Oct 2023 02:17 PM
சென்னை: "அத்திப்பள்ளியில் நடந்தது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அரசு நிர்வாகத்தில் நிலவும் உழலும், முறைகேடுகளும் இதுபோன்ற விபத்துக்களுக்கு வழிவகுத்து விடுகின்றன என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி உள்ள பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். பேரதிர்ச்சியும், பெரும் வேதனையும் தரும் இந்தச் சம்பவத்தில், இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கதி என்ன என்பது உறுதி செய்ய வேண்டும்.
இது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. அரசு நிர்வாகத்தில் நிலவும் உழலும், முறைகேடுகளும் இது போன்ற விபத்துக்களுக்கு வழிவகுத்து விடுகின்றன என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அத்திப்பள்ளி விபத்தில் இருந்து போன தொழிலாளர்கள் தமிழகத்தின் அரூர் அம்மாபேட்டை, வாணியம்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து சென்றவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிர் காலத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தங்களை செய்து, வரைமுறைகளை உருவாக்கி கடுமையாக அமலாக்க வேண்டும். இதில் தவறு நிகழுமானால் அனுமதியளிக்கும் அலுவலரும் பதிலளிக்கும் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்வதுடன், விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது", என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT