Published : 08 Oct 2023 11:17 AM
Last Updated : 08 Oct 2023 11:17 AM
கோவை: கோவை மாநகரில் சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்து காவல் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவலர்கள் நகரின் முக்கிய இடங்களில் நேரடியாக வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். தவிர, முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைத்தும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
மேலும், சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், போலீஸ்-இ-ஐ (காவலர் மின்னணுக் கண்) பிரத்யேக செயலியின் மூலமும் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே சமயம், சட்டம் ஒழுங்கு, விசாரணைப் பிரிவு காவல் நிலையங்களுக்கு இணையாக போக்குவரத்து காவல் நிலையங்கள் இல்லாதது,
தேவையான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிரமங்கள் ஏற்படுவதோடு, போக்குவரத்து விதிமீறல்களை காவல்துறையினரால் சமாளிக்க முடியாத சூழல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறியதாவது: மாநகர காவல்துறையில் தலா 20 சட்டம் ஒழுங்கு மற்றும் விசாரணைப் பிரிவுகள் உள்ளன. ஆனால், சாலை போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு, விசாரணைப் பிரிவுக்கு ஏற்ப போக்குவரத்து காவல் நிலையங்கள் இல்லை. சிங்காநல்லூர், காட்டூர், ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், பீளமேடு உள்ளிட்ட 8 போக்குவரத்து காவல் நிலையங்களே உள்ளன.
இங்கு பணியாற்றும் போலீஸார் தான் 20 காவல் நிலையங்களையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். சமீபத்தில் மாநகருடன் இணைக்கப் பட்ட வட வள்ளி, துடியலூர் காவல் எல்லைகளில் போக்குவரத்து விதிமீறல்களை ஆர்.எஸ்.புரம், சாயி பாபா காலனி காவலர்களே கண்காணித்து வருகின்றனர். மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது.
தேவையான எண்ணிக்கையில் காவல் நிலையங்கள் இல்லாதது, காவலர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணி, வாகன தணிக்கை மேற்கொள்ளும் பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கேற்ப போக்குவரத்து காவல் நிலையங்களை அதிகப்படுத்துவது அவசியம், என்றனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: மாநகரில் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய எண்ணிக்கைக்கு இணையாக போக்குவரத்து காவல்நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். கருத்துரு அனுப்புமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், மாநகரில் கிழக்கு, மேற்கு என 2 போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளனர். இங்கு மேலும் இரண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கவும் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆயுதப் படையில் இருந்த ஒரு கம்பெனி காவலர்கள் போக்கு வரத்துப் பிரிவில் பிரித்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT