Published : 27 Dec 2017 03:10 PM
Last Updated : 27 Dec 2017 03:10 PM
அழியும் தருவாயில் உள்ள தென் தமிழகத்தின் பாரம்பரிய ‘புலிக்குளம்’ நாட்டு மாடு இனத்தைப் பாதுகாக்க விரைவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என நாட்டு மாடு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாட்டு மாடு இனங்களில் காங்கேயம், உம்பளாச்சேரி, புலிக்குளம், பர்கூர் ஆகியவை முக்கியமானவை. விவசாயப் பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்படுவதாலும், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாலும் இந்த மாட்டின் காளையினங்களுக்கு சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
இதில் புலிக்குளம் காளை, சிவகங்கை மாவட்டம் புலிக்குளம் ஊரை சேர்ந்த பாரம்பரிய மாட்டினம்.
இந்த வகை மாடுகள் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. காங்கேயம் ஈரோட்டை சேர்ந்த பாரம்பரிய மாட்டினம். இந்த வகை மாடுகள் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் உள்ளன. அதேபோல் தஞ்சாவூரை சேர்ந்த உம்பளாச்சேரி மாட்டினம் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளன.
புலிக்குளம், காங்கேயம் ஆகிய இன மாடுகள், ரோமில் உள்ள பன்னாட்டு உணவு மற்றும் விவசாய நிறுவனத்தில் பதிவு செய்து இந்தியாவின் பாரம்பரிய மாட்டு இனமாக சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. இதில் புலிக்குளம் காளையினத்தை மத்திய அரசின் தேசிய விலங்குகளின் மரபணு அமைப்பு, 2012-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட நாட்டினக் காளையினமாக அறிவித்துள்ளது.
இவ்வாறு பல பெருமைகளைப் பெற்றுள்ள காங்கேயம், புலிக்குளம் மாடு இனத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். இதையடுத்து காங்கேயம் மாட்டினத்தைப் பாதுகாக்க ஈரோட்டில் ரூ.2.50 கோடி செலவில் காங்கேயம் ஆராய்ச்சி நிலையமும், புலிக்குளம் மாட்டினத்தை பாதுகாக்க சிவகங்கையில் ரூ.2 கோடியில் ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகளும் மேற்கொள்ளவில்லை என நாட்டு மாட்டின ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத் தடையால் 2015, 2016- ல் ஜல்லிக்கட்டு நடக்காததால், தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளையினங்களை பராமரிக்க முடியாமல் அவை அடிமாடுகளாக விற்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதால் புலிக்குளம், காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி ஆகிய காளையினங்களுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது.
இந்த காளைகளின் கடின உழைப்பு, கடினமான தட்பவெப்பநிலையும் தாங்கும் ஆற்றல் சர்வதேச நாடுகளுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அதனால் கடந்த காலத்தில் இலங்கை, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு காங்கேயம், புலிக்குளம் மாட்டினங்கள் அதிக அளவு ஏற்றுமதியானது.
தமிழகத்தில் புலிக்குளம், காங்கேயம் காளையினங்களை பாதுகாக்க அக்கறை காட்டாததால் தற்போது இவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. 1990-ம் ஆண்டில் 11 லட்சம் இருந்த காங்கேயம் மாடுகள் 2000-ம் ஆண்டில் 4.74 லட்சமாகவும், 2010-ம் ஆண்டில் 2 லட்சமாகவும் குறைந்துள்ளன. அதேபோல் புலிக்குளம் காளையினம் 50 ஆயிரம் மட்டுமே உள்ளன.
இந்த காளையினங்கள் அழிந்து போகாமல் தடுக்கவே ஆராய்ச்சி நிலையங்கள் அறிவிக்கப்பட்டன. கலப்பில்லாத காங்கேயம், புலிக்குளம் காளையினங்களில் விந்தணுக்களை எடுத்து அதன் மூலம் இந்த மாட்டின எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான ஆராய்ச்சிகளும், இந்த ஆராய்ச்சி நிலையங்களில் மேற்கொள்ளப்படும்.
மேலும் காங்கேயம், புலிக்குளம் காளை மாடுகளில் இருந்து விந்தணுக்களை சேகரித்தும் வைப்பார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த விந்தணுக்களை பயன்படுத்தி கன்றுக் குட்டிகளை உருவாக்கலாம். அதன் மூலம், இந்த மாட்டினங்களை அழிந்து போகாத அளவுக்கு பாதுகாக்கலாம். ஆனால் இதற்கான பணிகள் ஆமை வேகத்திலே நடக்கின்றன என்றார்.
இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, மானாமதுரை அருகே மாங்குளத்தில் புலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க 44 ஏக்கரில் சர்வே பணி நடைபெற்றது. அங்கு கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT