Published : 17 Dec 2017 06:36 AM
Last Updated : 17 Dec 2017 06:36 AM

ஆற்று மணலுக்கு மாற்று மணல்... சாத்தியங்கள் என்ன?

“தமிழகத்தின் ஆறுகளிலிருக்கும் மணல் குவாரிகளை ஆறு மாதங்களுக்குள் மூடிவிட வேண்டும். ஆறுகளில் இனி புதியதாக மணல் குவாரிகளைத் திறக்கக் கூடாது. தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம் - சாண்ட்’ செயற்கை மணல் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும். கருங்கல் ஜல்லிகளை உடைக்கும் கல்குவாரிகளைத் தவிர கிரானைட் கற்களை வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது”

ஆறுகளில் மணல் அள்ளுவது தொடர்பாக சமீபத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவை.

ஆற்று மணலுக்கு மாற்று குறித்து கடந்த பத்து ஆண்டுகளாகவே பேசப்பட்டுவரும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதனை உறுதி செய்துள்ளது. தவிர, தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை. அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட 10 - 25 மீட்டர் ஆழம் வரையெல்லாம் மணல் அள்ளப்பட்டுவிட்டது. இனி வழியே இல்லை, மணலுக்கான மாற்றை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். மாற்று மணல் சரியில்லை எனில் அதனினும் சரியான மாற்றைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான தேடலே இந்தக் கட்டுரை.

எப்படி உருவாகிறது மணல்?

காட்டாறுகள் காடு, மலைகளில் ஓடிவரும்போது பாறைகளை உருட்டியும் சிதைத்தும் அரித்தும் சமதளத்துக்கு கொண்டுவரும் கனிமமே ஆற்று மணல். ஆற்றுப் படுகைகளில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மணல் உருவாக சுமார் அரை நூற்றாண்டேனும் தேவை. இயற்கையின் நியதிப்படி இயற்கையாக உற்பத்தியாகும் மணலின் அடிப்படையில் மட்டுமே மனிதர்கள் ஆற்று மணலை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, ஆண்டுக்கு ஒரு டன் மணல் இயற்கையாக உற்பத்தியானால் அந்தளவுக்கு அல்லது அதனைவிட குறைவாக மட்டுமே மணலை எடுக்க வேண்டும். அப்போதுதான் சமநிலையைப் பேண முடியும்.

என்ன பாதிப்பு?

அடிப்படையில் மணல் ஒரு தண்ணீர் தாங்கி. மணல் இல்லாவிட்டால் பூமியின் அடுத்தடுத்த மண் அடுக்குகளின் வழியாக தண்ணீர் உள்ளே சென்றுவிடும். நிலத்தடி நீர் மட்டம் உயருமே என்று தோணலாம். அதை எடுக்க பல மடங்கு செலவு செய்ய வேண்டும். தவிர, நமது பாரம்பரியக் கால்வாய்கள் ஆற்றின் மணல் மட்டத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கின்றன. பல அடி ஆழத்துக்கு மணலை அள்ளிவிட்டதால் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. இதனால் சிற்றாறுகள், ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர்வரத்து தடைபடுகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆற்றுப் படுகைகளின் ஆழம் இயல்புக்கு மாறாக அதிகரித்ததால் விபத்துக்களும் உயிர்ச் சேதங்களும் அதிகரிக்கின்றன.

தற்போதைய நிலை என்ன?

தமிழக ஆறுகளில் 38 அரசு மணல் குவாரிகள் இயங்கிவந்தன. அவற்றில் 17 மணல் குவாரிகளுக்கு அனுமதி காலம் முடிந்துவிட்டது. ஆனாலும் சட்டவிரோதமாக அங்கேயும் மணல் அள்ளப்பட்டு வந்தது. மீதமுள்ள 21 குவாரிகளில் அரசே மணல் அள்ளி விற்றுவருகின்றன. மணலை அள்ளுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. மணலை மனித சக்தியால் மட்டுமே எடுக்க வேண்டும். இயந்திரங்களால் அள்ளக்கூடாது. அரை மீட்டர் ஆழத்துக்குள் மட்டுமே மணல் எடுக்க வேண்டும். நீர்மட்ட அளவுக்குக் கீழே மணல் அள்ளக்கூடாது.

குடிநீர் கிணறுகள், பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குள் மணல் அள்ளக் கூடாது. ஆனால், 20 மீட்டர் ஆழம் வரை மணல் அள்ளுகிறார்கள். தற்போது 2.5 யூனிட் மணலின் அரசு விலை ரூ.1,050 மட்டுமே. ஆனால், 3 யூனிட் கொண்ட ஒரு லோடு மணலின் விலை 50 ஆயிரம் மூதல் 80 ஆயிரம் வரை வெளியே விற்கப்படுகிறது. இதற்கு காரணமாக மணல் கிடைக்க 15 நாட்களுக்கு மேல் குவாரியில் காத்திருக்க வேண்டும். 15 நாட்கள் ஓட்டுநர், உதவியாளர் சம்பளம் மற்றும் லாரி வாடகை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் பல மடங்கு விலை ஏற்றம் தவிர்க்க முடியாது என்கிறார்கள் மணல் விற்பனையாளர்கள். மணல் விலை உயர்வால் ரூ.1700-ஆக இருந்த ஒரு சதுர அடி கட்டுமானச் செலவு ரூ.3,000-ஆக உயர்ந்துவிட்டது.

மணல் தேவை எவ்வளவு?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டுமே தினமும் 10 ஆயிரம் லோடு மணல் தேவை. தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் லோடு மணல் தேவை. மொத்தமாக ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி யூனிட் மணல் தமிழகத்துக்கு தேவை. இவைதவிர கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் மணல் கணக்கு தனி. ஆனால், தற்போது நீதிமன்றம் உத்தரவால் குவாரிகள் ஆறு மாதங்களில் மூடப்படும் என்பதால் மணல் தேவை கேள்விக் குறியாகியிருக்கிறது.

தவிர, ஆறுகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளிவிட்டதால் அவ்வளவு மணலும் இங்கில்லை. மணலுக்கு மாற்றான ‘எம் சாண்ட்’ எனப்படும் (Manufacturing sand) செயற்கை மணலுக்கு நமது கட்டுமானங்கள் மாறுவது கட்டாயமாகிறது.

செயற்கை மணல்... உண்மை என்ன?

செயற்கை மணல் குறித்த விளக்கங்களை அளிக்கிறார் தமிழ்நாடு மூத்தப் பொறியாளர் சங்கத்தின் வீரப்பன். “கருங்கல் ஜல்லிகளை உடைத்து தயாரிக்கப்படுவதே எம் - சாண்ட் எனப்படும் செயற்கை மணல். இதுவும் கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ கொண்டதுதான். செயற்கை மணலின் மணியளவில் பாதிக்கு மேல் பருமணல் இருப்பதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், தரமும் வலிமையும் கூடுதலாகவே கிடைக்கும். பூச்சு வேலைகளுக்கு செயற்கை மணல் ஏற்றதாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஜல்லி தயாரிக்கும்போது கிடைக்கும் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்த முடியும். செயற்கை மணலில் பூச்சு வேலைக்கென்றே சிறப்பு பூச்சு மணல் சந்தையில் கிடைக்கிறது. அதுவும் கிடைக்கவில்லை என்றாலும் செயற்கை மணலை சல்லடையில் சல்லித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

செயற்கை மணல் கான்கிரீட்டில் தண்ணீருடன் superplasticizer கலவை கலந்து பயன்படுத்தும்போது ஆற்று மணல் கான்கிரீட்டை விட இது உறுதியாக இருக்கிறது. மத்திய தரைக்கடல் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் செயற்கை மணலைப் பயன்படுத்தி உறுதியான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா செயற்கை மணலால் கட்டப்பட்டது. எல்லாவற்றையும்விட செயற்கை மணலின் விலை ஆற்று மணலை விட சுமார் 30 சதவீதம் குறைவு” என்கிறார்.

செயற்கை மணலின் தேவை

இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தொழில் முனைவோருமான சரவணன் சந்திரன், “தற்போது ஒரு கனஅடி எம்-சாண்ட் ரூ.60 - ரூ.70 வரை விற்கப்படுகிறது. ஆற்று மணல் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் யூனிட் மணல் தேவை. தமிழகத்தில் சுமார் ஆயிரம் கல் உடைக்கும் கிரஷர்கள் இருக்கின்றன. ஆனால், தடை காரணமாக அவற்றில் 50 மட்டுமே செயல்படுகின்றன. அவற்றில் சுமார் ஐயாயிரம் யூனிட் உற்பத்தி நடக்கிறது. ஒரு கிரஷரில் இந்தப் பணியை தொடங்க ரூ. 1 கோடி முதல் ரூ.5 கோடி வரை முதலீடு தேவை. ஆனால், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் அல்லது மேற்கண்ட கிரஷர்களை நடத்த மானியங்களை அளித்தால் மீதமிருக்கும் கிரஷர்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியும். இதன்மூலம் தமிழகத்தின் செயற்கை மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம்.” என்கிறார்.

செயற்கை மணல் பரிசோதனை

கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் முன்பாக செயற்கை மணலை பரிசோதிப்பது நல்லது. செயற்கை மணலை கையால் அள்ளிப் பார்க்கும்போதே தூசு அதிகமிருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ளலாம். புகைப்படம் எடுத்து அதனை ஜூம் செய்து பார்ப்பதன் மூலம் மணலின் பருமணல் கனவடிவத்தை அறிந்துக்கொள்ளலாம். உருளை வடிவில் துகள் இருந்தால் அது தரமானது. தட்டையான வடிவில் துகள்கள் இருந்தால் அது தரமற்றது.

தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வகங்கள், பொதுப்பணித் துறையின் மண் தன்மை ஆராய்ச்சி துறை மற்றும் அனைத்துப் பொறியியல் கல்லூரி ஆய்வகங்களிலும் செயற்கை மணலை பரிசோதனை செய்யலாம். சென்னையில் தரமணி தேசிய தரப் பரிசோதனை ஆய்வகம், கிண்டி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆய்வகம், பெருங்குடி ஐகொமெட் ஆய்வகம் ஆகிய இடங்களில் செயற்கை மணல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இரண்டு வகைகளில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. நுண்ணிய துகள்கள் ஆய்வு, சல்லடை ஆய்வு, வடிவ ஆய்வு ஆகியவை மட்டும் என்றால் இதற்கு ரூ. 2,000 மட்டுமே கட்டணம். ஆய்வு முடிவுகளும் உடனே கிடைத்துவிடும். சிறு, நடுத்தர கட்டுமானங்களுக்கு இந்த ஆய்வு முடிவுகளே போதுமானது. ஆனால், தொழிற்சாலை, பாலங்கள் உள்ளிட்ட பெரும் கட்டுமானங்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வரையறையான ஐ.எஸ். 383:2016 தர நிர்ணயம் கட்டாயம். எனவே, அவற்றுக்கு செயற்கை மணலின் தண்ணீர் உறிஞ்சும் தன்மை உட்பட 12 வகையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இதன் முடிவுகள் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம். இதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கட்டணம் வாங்கப்படுகிறது.

Burj Khalifa எம்-சாண்ட் மணலால் கட்டப்பட்ட துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா.  

சர்வதேச நிலவரம் என்ன?

இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்வது நீண்ட காலத்துக்கு சாத்தியம் இல்லை; நிரந்தரத் தீர்வும் இல்லை. ஏனெனில் சர்வதேச அளவில் மணல் ஏற்றுமதி விவகாரம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. சர்வதேச அளவில் மணல் இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். உலக ஏற்றுமதி மணலில் 13 சதவீதத்தை சிங்கப்பூர் இறக்குமதி மூலம் மட்டுமே பெறுகிறது. இரண்டாம் இடத்தில் கனடாவும் (11%), மூன்றாம் இடத்தில் பெல்ஜியமும் (9 %) இருக்கின்றன. உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உட்பட 20 நாடுகள் மணலை ஏற்றுமதி செய்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிலிப்பைன்ஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது மட்டுமே ஓரளவு லாபகரமாக அமையும். இதர நாடுகளின் தூரம் மற்றும் மணலின் தரம் காரணமாக மணல் இறக்குமதி லாபகரமானது இல்லை. மேற்கண்ட நாடுகளில் ஒரு கனஅடி மணல் சராசரியாக ரூ.80 - 90க்கு கிடைக்கிறது. தமிழகத்தை விட ரூ.30 குறைவு என்றாலும் வருங்காலங்களில் போட்டியின் காரணமாக விலை ஏறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஏனெனில் மணல் ஏற்றுமதி மலேசியாவிலும் கம்போடியாவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு 54 ஆயிரம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் அங்கு சூட்டை கிளப்பியிருக்கிறது. மலேசியச் சுற்றுச்சூழல் மையத்தின் செயல் இயக்குநரான ஆண்டனி டான் கி ஹிவா உள்நாட்டு வளங்கள் சுரண்டப்படுவதாக ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மலேசியா இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான வான் ஜுனைடி டியான்கு ஜாஃபர் மணல் ஏற்றுமதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றிருக்கிறார்.

கம்போடியாவில் ட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தியே மணலை ஏற்றுமதி செய்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு கம்போடியாவில் ஆற்று மணல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. வருங்காலத்தில் நிரந்தர தடை விதிக்கவும் கம்போடியா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தோனோஷியாவிலும் இதே நிலைதான். பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மணல் ஏற்றுமதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. எனவே, இறக்குமதி மணல் நீடித்த தீர்வாக அமையாது.

மன மாற்றமே ஒரே தீர்வு

மணல் உட்பட மேற்கண்ட எதையுமே மாற்றாக பயன்படுத்துவது குறைவாக இருப்பதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாதது மட்டுமே என்கிறார்கள் கட்டுமான துறையினர். “தமிழகத்தைப் பொறுத்தவரை வீடு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு ஆற்று மணல் மட்டுமே உறுதியானது என்று நம்புகின்றனர். புரோத்தர்ம் ப்ளாக் கற்களைப் பயன்படுத்தினால் உறுதியாக இருக்காது என்று நம்புகிறார்கள். கட்டுமானக் கழிவுகளை பயன்படுத்துவதை அபசகுனமாகக் கருதுகிறார்கள். இந்த மனநிலை மாறும்போதுதான் கட்டுமானத் துறையில் மாற்றுப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும்...” என்கிறார்கள் அவர்கள்.

கட்டுமான கழிவுகளை பயன்படுத்தலாமா?

கட்டுமானக் கழிவுகள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கட்டுமானக் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. இந்தியா கட்டுமான கழிவுகளை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதில் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. கட்டுமானக் கழிவுகள் (Construction and Demolition waste) மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது அமெரிக்கா. மறுசுழற்சி மூலம் ஒரு டன் கான்கிரீட்டை சேமிப்பதன் மூலம் 1,360 கேலன் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். அமெரிக்கா நெடுஞ்சாலை துறை சாலைப் பணிகளுக்காக கணிசமான அளவை கட்டுமான கழிவுகளை பயன்படுத்திக்கொள்கிறது. அமெரிக்க ராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவு கட்டுமான கான்கீரிட் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து கட்டிடங்களின் அஸ்திவாரத்துக்கு பயன்படுத்துகிறது. தமிழக கட்டுமானத்துறையில் கட்டுமானக் கழிவுகளை 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்கிறார் பொறியாளர் வீரப்பன்.

“பெரும்பாலான கான்கிரீட் கழிவுகள் பிரத்யேக இயந்திரங்கள் மூலம் உடைத்து ஜல்லிகளாக பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் கழிவுகளை மறுசுழற்சி செய்து முழுமையாக ஒரு கட்டிடத்தையே கட்டலாம். வழக்கமான உறுதியில் 5 - 10 சதவீதம் மட்டுமே குறையும். இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. எதிர்காலத்தில் கட்டுமானக் கழிவுகளை பயன்படுத்துவது அதிகரிக்கும்” என்கிறார் அவர்.

ஹாலோ ப்ளாக்குகள் என்னாயிற்று?

 

ஹாலோ ப்ளாக் கற்கள் செங்கல்லைவிட உறுதி குறைவானது என்பதால் குறிப்பிட்ட சதவீதத்தினர் சுற்றுச்சுவர் கட்ட மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தற்போது ‘ஸ்மார்ட் செங்கல்’ எனப்படும் புரோத்தர்ம் ப்ளாக் நவீன ‘ஹாலோ பர்ண்ட் ப்ளாக்’ கற்களாக உருவெடுத்துள்ளன. செங்கலைவிட 60 சதவீதம் எடை குறைவான இது செங்கல்லை விட 45 சதவீதம் சூட்டை தாங்குகிறது. இது கட்டிடத்தின் உள்பகுதியை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. ஆனாலும் இதுவரை பெரியளவில் இதுவும் கட்டுமானத் துறையில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x