Published : 16 Jul 2014 07:11 PM
Last Updated : 16 Jul 2014 07:11 PM

அறிக்கை நாயகர் என கிண்டல் செய்வதா?- ஜெயலலிதா மீது கருணாநிதி காட்டம்

"என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், என்னை 'அறிக்கை நாயகர்' என்று பேரவையிலே கிண்டல் செய்வதா?" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.



இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், "தமிழகச் சட்டப்பேரவை 10ஆம் தேதி தொடங்கி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. எனது உடல் நலம் குறித்து, அங்கே நான் அமர்வதற்கு இந்த ஆட்சியினர் முறையான இடவசதி செய்து தராத காரணத்தால், நான் சட்டப்பேரவைக்குச் செல்வதில்லை என்றாலும், அங்கே நடைபெறும் நடைமுறைகளை ஏடுகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் கவனித்து வருகிறேன்.

ஆனால் அந்த நடைமுறைகள் வழக்கம் போலவேதான் உள்ளன. வழக்கம் போலவே என்றால், அனைத்துத் துறைகளுக்கான அறிவிப்பு களையும் முதலமைச்சரே 110வது விதியின் கீழ் படித்தல்; வெளிநடப்புகள் அல்லது வெளியேற்றங்கள்; எதிர்க் கட்சியினருக்கு வாய்ப்பு தராமை; ஆளுங்கட்சி பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ யாராவது எதிர்க்கட்சியினர் பேச முற்பட்டால், உடனே குறிப்பிட்ட சில அமைச்சர்கள் குறுக்கிட்டு அவர்களை பேச விடாமல் செய்தல்; அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட மானியங்களுக்குப் பதில் அளிக்கும் போது முதலமைச்சருக்குப் பாராட்டுப் புராணம் படித்தல்; அத்துடன் என்னை எந்த அளவுக்குக் கடுமையாக விமர்சனம் செய்து தாக்கிப் பேசிட முடியுமோ அந்த அளவுக்குப் பேசுதல் என்ற இந்த நடைமுறைகள் அப்படியேதான் தொடருகின்றன.

தொழில் அமைச்சர் பேரவையில் முதலில் எங்கள் மீது தெரிவித்த குற்றச்சாட்டு, தி.மு.க. தலைவரும், உறுப்பினர் ஸ்டாலினும் தமிழகத்திலிருந்து முதலீட்டாளர்கள் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதாக ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். எந்தெந்த தொழிற்சாலைகள் என்று விவரத்தைக் கூறவில்லை என்பதாகும்.

ஆனால் அதே அமைச்சர் அளித்த பதிலில், "கர்நாடக முதல்வரும், அதிகாரிகளும் கோவையில் நடத்திய ஒருகூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் விருப்ப வெளிப்பாட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதன்பேரில் சிலர் அதனை கொடுத்துள்ளார்கள்" என்று அவரே தெரிவித்திருப்பதிலிருந்தே, நான் குறிப்பிட்டவாறே கோவையில் அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதும், கர்நாடகா முதலமைச்சர் அங்கே வந்து தமிழ்நாட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததும் உண்மை என்பது தெளிவாகிறதா அல்லவா?

மேலும் அந்த அமைச்சர் தன் பேச்சில், "குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அதுபோல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்" என்று கூறியிருப்பதில் இருந்தே, தமிழகத்தின் நிலைமை என்ன என்று தெரிகிறதே? இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதல் அமைச்சர் வந்து கூட்டம் போட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர, எங்கள் மீது பாய்ந்து விழுந்து என்ன பயன்?

தொழில் அமைச்சர் பேரவையில் கூறியிருக்கின்ற குற்றச்சாட்டு, உண்மையில் அவர் கூறுவது அல்ல. கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதுதான்.

முதலமைச்சர் அவ்வாறு பேசியதற்கு 3-4-2014 அன்றே விரிவாகப் பதில் எழுதிவிட்டேன். இருந்தாலும் துறையின் அமைச்சர் பேரவையில் அதே கருத்தைப் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களை யெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றி சுப்பிரமணியம் சுவாமி அண்மையில் கூறும்போது, "தொழில் வளம், பொருளாதார வளர்ச்சி எதுவுமே இல்லை. இங்கிருக்கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன்.

தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்கு சென்ற முதலீட்டை, இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே" என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா எங்கள் மீது கோபப்பட்டு என்ன பயன்? இந்த விவரங்களையெல்லாம் திரட்டி நான் அறிக்கை வெளியிடுவது தவறா? பேரவையில் இருக்கிறோம் என்ற பாதுகாப்பில் அமைச்சர் என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், என்னை 'அறிக்கை நாயகர்' என்று பேரவையிலே கிண்டல் செய்வதா? இது போல தொடர்ந்து பேரவையை நடத்தச் செய்து, முதல்வரே, தமிழகச் சட்டமன்றத்தின் மாண்பினைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படாதீர்!" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x