Published : 07 Oct 2023 03:53 PM
Last Updated : 07 Oct 2023 03:53 PM
மேட்டூர்: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், என சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. வெயில், மழை என வித்தியாசமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் பலரும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையால் சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்துதல், கொசுப் புழுக்களை அழித்தல் போன்ற தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 1,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் சளி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு முன்னதாக சளியுடன் சாதாரணமாக இருக்கும் குழந்தைகளுக்கு மறுநாள் மாலை அல்லது இரவில் காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற காய்ச்சல். இப்படியில்லாமல் சளி பிடித்து 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வந்தால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலாகும்.
இப்படி பாதிக்கும் குழந்தைகளுக்கு தொண்டையில் புண்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த காய்ச்சலைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையிடம் இருந்துதான் மற்ற குழந்தைக்கு பரவும். எனவே, விடுமுறையில் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் ஹோட்டல் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது கேன் தண்ணீராக கூட இருக்கலாம். எனவே தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து பருக வேண்டும். அதேபோல வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதோடு, மழைநீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட நீரில் தான் முட்டையிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தேங்கும் மழைநீரில் குழந்தைகள் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். காய்ச்சலின்போது வயிற்றுப் போக்கு, அடிக்கடி வாந்தி எடுத்தல், கை, கால் வலி இருந்தால் குழந்தைகளுக்கு அதிகளவு நீராகாரங்களை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டுகோள்: டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு நடவடிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தினாலும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களை பொறுத்தவரை வீட்டின் அருகில் உபயோகிக்காமல் உள்ள பழைய பொருட்கள், தேங்காய் சிரட்டை, குடம், அம்மிக்கல் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காமல் தவிர்க்க வேண்டும். குடியிருக்கும் பகுதியைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT