Published : 02 Dec 2017 12:06 PM
Last Updated : 02 Dec 2017 12:06 PM
பீட்டா புகாருக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளிக்க அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விவரங்களை தொகுத்து கால்நடை பராமரிப்புத் துறை அறிக்கை தயார் செய்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையும், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால், பொங்கல் பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டும்.
2008-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் நலவாரியம், பீட்டா அமைப்புகளால் சிக்கல் எழத் தொடங்கியது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும், அதை முறியடித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதும் தொடர் கதையானது.
2015, 2016-ம் ஆண்டுகளில் பீட்டாவின் எதிர்ப்பால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தமிழகம் முழுவதும் பொதுமக்களுடன் இணைந்து மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் பணிந்தன. அதனால், சிறப்பு சட்டம் கொண்டு வந்து பொங்கல் பண்டிகை முடிந்தபிறகு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது.
இந்நிலையில், பீட்டா அமைப்பு நடப்பு ஆண்டு ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்குமாறும் தெரிவித்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பீட்டாவின் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதனால், கடந்த காலத்தைப்போல் வரும் பொங்கல் பண்டிகையிலும் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் வருமோ என்ற கவலை தென் மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பீட்டா சமர்ப்பித்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் கடந்த ஒரு வாரமாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது, இந்த ஆய்வு முடிந்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் தமிழக அரசிடம் அனுப்புவதற்கான பதில்களை தயார் செய்து வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2017-ம் ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் எந்த துன்புறுத்தலும், விதிமீறல்களும் நடக்கவில்லை. ஆனால், வாடிவாசலில் வெளியேறாமல் நிற்கும் மாடுகளை குச்சிகளை வைத்து குத்துவது போன்றும், மாட்டின் வாலை அதன் உரிமையாளர் கடிப்பது போன்றும், வீரர்கள் கொம்புகளை பிடித்து தொங்குவது போன்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பீட்டா சமர்ப்பித்துள்ளது.
அதில் பல புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் நடந்தமாதிரி தெரியவில்லை. கடந்த காலத்தில் எடுக்கப்பட்டவை. அதனால், அவை போலி என தெரிவித்துள்ளோம். வீரர்கள் மாட்டின் கொம்பை பிடித்து தொங்கக்கூடாது, திமிலை பிடித்துதான் தொங்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் கூறியுள்ளனர். அதற்கு நாங்கள், அதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட வீரர்களை உடனடியாக விளையாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டதாக சொல்லியுள்ளோம். மாட்டின் முதுகில் தட்டுவதுபோன்ற புகைப்படத்துக்கு, மாட்டின் உரிமையாளர் மாட்டினை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதாக கூறியுள்ளோம். இதுபோக பரிசோதனை செய்த இடத்தில் போதிய தண்ணீர், வைக்கோல் வைக்கவில்லை என்பதையும் குற்றச்சாட்டாக சொல்லி உள்ளனர். அதற்கு எங்கள் தரப்பில் இருந்து ஆதாரங்களை கொடுத்துள்ளோம்.
இதுபோன்று பல்வேறு புகார்களை தெரிவித்து ஒட்டுமொத்தமாக விதிமீறல்கள் நடந்துள்ளதாக பீட்டா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் கால்நடைத்துறை அதிகாரிகளை கொண்டு பதில் தயார் செய்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம். அதை தமிழக அரசுக்கு அவர் அனுப்பிவைப்பார். இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT