Published : 07 Oct 2023 02:48 PM
Last Updated : 07 Oct 2023 02:48 PM

பொறியாளர்களின் வினோத கட்டுமானம்: விரிந்து குறுகும் மழைநீர் வடிகால்வாய் @ தாம்பரம்

மாருதி நகர் மற்றும் வள்ளல் யூசுப் நகர் பகுதியில் அளவில் குறைவாக கட்டப்பட்டு வரும் கால்வாய்கள். | படம்: எம்.முத்துகணேஷ்

செம்பாக்கம்: 10 அடியாக தொடங்கும் மழைநீர் வடிகால், 2.5 அடியாக சுருங்கி, மீண்டும் 5 அடியாக அமைக்கப்படுகிறது. வினோதமான முறையில் தாம்பரம் மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி சார்பில் 3-வது மண்டலம், 42-வது வார்டில், ரூ.3 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராஜகீழ்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஏரியின் களுங்கு வழியாக வெளியேறி, செம்பாக்கம் ஏரியில் சேர வேண்டும்.

நாளடைவில் குடியிருப்புகள் அதிகரித்து விட்டதால் உபரிநீர் வடியும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது. இதேபோல் மாநகராட்சி சார்பில் உபரிநீர் வந்து சேரும் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, பூங்கா, ரேஷன் கடை, வணிக வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் போன்றவை கட்டப்பட்டன. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் மாருதி நகர், வள்ளல் யூசுப் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளில் பல நாட்கள் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.

இதனை சீரமைக்க ரூ.3 கோடியில் கால்வாய் ௮மைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் மூலம் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக நேரடியாக செம்பாக்கம் ஏரியில்சேரும் வகையில் வடிகால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஏற்கெனவே 5 அடி அகலத்தில் தொடங்கும் வடிகால்வாய், பிறகு 2.5 அடியாக சுருங்கி ஏரியை சென்றடைகிறது. தற்போது அந்த கால்வாய் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 5 அடி கால்வாய் உள்ள பகுதிகளில் கூடுதலாக 5 அடி வெட்டப்பட்டு 10 அடி கால்வாயாக மற்றப்பட்டுள்ளது. எனினும், 2.5 அடிஅகலத்தில் உள்ள கால்வாய் அதே அளவிளேயே தொடர்கிறது. மாருதி நகரின் சில இடங்களில் மட்டும் அது 5 அடியாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், 10 அடி கால்வாயில் வரும் மழைநீர் நேரடியாக, 2.5 அடி கால்வாயில் எப்படி செல்லும் ௭ன்ற கேள்வி எழுவதோடு, உபரி நீர்மீண்டும் குடியிருப்பு பகுதிகளை சூழும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் முறையாக திட்டமிடாமல், உள்ளூர் பொதுமக்கள், மாமன்றஉறுப்பினர்கள் ஆகியோரை ஆலோசிக்காமல், இப்பணியை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மக்கள் பசுமை இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரேகா ரெங்கையன்

இதுகுறித்து, மக்கள் பசுமை இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ரேகா ரெங்கையன் கூறியது: ராஜகீழ்ப்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற நெடுஞ்சாலை துறையால் ஏற்கெனவே சுமார், 20 அடி அகலத்துக்கு மழைநீர் வடிகால் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியில் கட்டப்படும் கால்வாய் திட்டமிடாமல் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பயன் ஒன்றும் இல்லை. மீண்டும் வெள்ளபாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து மூன்றாவது மண்டல பொறியாளர், உதவி செயற் பொறியாளர் ஆகியோரிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாகசமாளித்து பதில் சொல்கிறார்களே தவிர திட்ட வரைபடம், பணியின் விதம் பற்றி தெளிவாக பதில் அளிப்பதில்லை. பொதுமக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்ளவோ, மழைநீர்வடிந்து செல்ல நிரந்தர தீர்வுமேற்கொள்ளவோ அதிகாரிகள் பணிசெய்யவில்லை.

இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

42-வது வார்டு குடியிருப்புவாசிகள் சிலர் கூறியது: ஏரியில் இருந்து வரும் உபரிநீர், 40 அடி கால்வாய் மூலமாக நேரடியாக மாருதி நகரில் உள்ள குட்டையில் கலந்து அங்கிருந்து, 20 அடி கால்வாயில் நேரடியாக செம்பாக்கம் ஏரியில்கலந்து வந்தது. நீர் நிலைகளை அரசும், தனியாரும் ஆக்கிரமிப்பு செய்ததால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் ஆக்கிரமிப்பு செய்தது.

இதனால், ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் வள்ளல் யூசுப் நகர், மாருதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒரு வாரத்துக்கு வீட்டைவிட்டு மக்கள் வெளியேற முடியாத வகையில் மழைநீர் தேங்கி நிற்கும்.

தற்போது மாநகராட்சி நிர்வாகம், 10 அடி கால்வாயில் பணியை தொடங்கி, 2.5அடி கால்வாய்வழியாக, 5 அடி கால்வாய் மூலம் ஏரியில்கலக்கும் வகையில் கட்டமைப்பை செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கி இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

ம.கல்யாணி மணிவேல்

இதுகுறித்து 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ம.கல்யாணி மணிவேல் கூறியதாவது: இந்த கால்வாய் அமைக்கப்படுவதால் குடியிருப்பு பகுதியில் மழைவெள்ளம் சூழும் அபாயம் உள்ளது என, பொதுமக்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இது குறித்து மாமன்ற உறுப்பினர் என்ற முறையில், மேயர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.

அதிகாரிகள் ஆய்வும்செய்தனர். ஏற்கெனவே பணிகள் தொடங்கிவிட்டதால் விரைவில் கூடுதல் நிதிஒதுக்கி குறைபாடுகள் அனைத்தும் தீர்க்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மாருதி நகர்மற்றும் வள்ளல் யூசுப் நகர் பகுதி குடியிருப்புகள் பாதிக்காத வகையில் மழைநீர் வடிகால்அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் 820 மீட்டர் தூரத்துக்கு 5 அடி அகலத்தில் வடிகால் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே, 5 அடி கால்வாய் வழியாக வரும் தண்ணீர், 2.5 அடி கால்வாய் வழியாக ஏரியில் கலந்து வந்தது. தற்போது, 5 அடி கால்வாயை அகலப்படுத்தும் விதமாக, கூடுதலாக 5 அடி வெட்டப்படுகிறது.

மேலும், ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் மழைக்காலங்களில் அதிகமாக வெளியேறும் என்பதால் ஏற்கெனவே உள்ள5 அடி கால்வாயில், கூடுதலாக 5 அடி திறந்தவெளி கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மழை காலத்தில் மட்டும் கூடுதல் தண்ணீர் வெளியேறும். மற்றநாட்களில் இந்த பிரச்சினை இருக்காது. தற்போது அமைக்கப்பட்டுவரும் கால்வாய் அகலம் போதுமானது.

மேலும், கூடுதலாக, 92 மீட்டர், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்வாய் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது. குறுகியஅளவு கால்வாயாக இருந்தாலும்மழைக்காலங்களில் பெரிய பாதிப்புக்கு வாய்ப்பு இல்லை. திட்டமிட்டே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தாம்பரம் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x