Published : 07 Oct 2023 02:27 PM
Last Updated : 07 Oct 2023 02:27 PM
சென்னை: உலகையே அச்சுறுத்திய தொற்றுநோய் கரோனாவையே விரட்டியடித்த சென்னை மாநகரில் நீரிழிவு, இதய நோய்கள் போன்றதொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் சவாலாக இருந்து வருகிறது. உடல் உழைப்பு குறைந்ததால், இந்த தொற்றா நோய்கள் அழையாத விருந்தாளியாக உடலுக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. எனவே இதற்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வாக அமைகிறது. அதிலும் நடைபயிற்சி முக்கியமாகும். ஆனால் அதற்கு ஏற்ற பொது இடங்கள் மற்றும் விளையாட்டு திடல்களின் எண்ணிக்கை சென்னையில் குறைவாகவே உள்ளன.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மொத்தம் 210 விளையாட்டு திடல்களை பராமரித்து வருகிறது. அதில் 14 திடல்கள் நட்சத்திர விளையாட்டு திடல்களாக உள்ளன. இதில் தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டு கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு திடலும் ஒன்று. 17,658 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுமானக் கழிவுகளை கொட்டுமிடமாக மாநகராட்சி மாற்றியுள்ளது. இதனால் தினமும் திடலை பயன்படுத்தி வரும் இளைஞர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த விளையாட்டு திடலை தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறோம். இங்கு கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். மழை காலங்களில் இங்கு நீர் தேங்குவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாநகராட்சி நிர்வாகமே கட்டுமானக் கழிவுகள் மற்றும் மண்ணை கொட்டி வருகிறது.
இவை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதை கொட்டுவதற்காக வரும்லாரிகளால் விளையாட்டு திடலே சேறும், சகதிக்காடாகவும் மாற்றிவிட்டது. இதனால் எங்களால் விளையாட முடியவில்லை. எனவே இந்த திடலை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையரிடம் (கல்வி) கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்கவில்லை. 111-வது வார்டு கவுன்சிலர் மு.ஆ.நந்தினியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கோபாலபுரம் பகுதியில் பருவமழைக்கு முன்பாக பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அப்பணிகளின்போது அகழ்ந்தெடுத்த மண் மற்றும் கட்டுமான பொருட்கள் திடலில் கொட்டப்பட்டன. அதை அகற்றும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.
விரைவில் அனைத்து கழிவுகளும் அகற்றப்படும். இந்த திடலில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குத்துச்சண்டை பயிற்சி மையம் அமைக்கவும், திடலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT