Published : 07 Oct 2023 05:09 AM
Last Updated : 07 Oct 2023 05:09 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வங்கிக் கணக்கில் இருந்து, நண்பருக்கு செயலி மூலம் ரூ.1,000 அனுப்பி உள்ளார். ஆனால், அந்த பணம் நண்பரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாமல், கணேசனின் வங்கிக் கணக்குக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவரது செல்போனுக்கு வந்த வங்கியின் குறுஞ்செய்தியில், வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை ரூ.756 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து கணேசன் அதிர்ச்சி அடைந்தார். நேற்று காலை வங்கிக் கிளைக்கு சென்று, இதுபற்றி தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் இதுகுறித்து விசாரித்து தெரிவிப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். சற்று நேரம் கழித்து வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையை சரிபார்த்தபோது, ரூ.756 கோடி என காட்டாமல், அவரது சேமிப்புத் தொகையை மட்டும் காட்டியது. இதையடுத்து அவர் நிம்மதியடைந்தார்.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘மும்பையில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். உரிய விசாரணைக்கு பிறகு, இதில் ஏற்பட்ட தவறு குறித்து தெரியவரும்’’ என்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT