Published : 07 Oct 2023 06:10 AM
Last Updated : 07 Oct 2023 06:10 AM

மீன்பிடி துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்: உச்ச நேர மின்கட்டணம், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மின்சார உச்ச நேர கட்டணம், நிரந்தர கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை மீன்பிடி துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: உச்ச நேர மின்கட்டணம், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மீன்பிடி துறைமுக ஐஸ் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சங்கத்தின் தலைவர் எம்.இ.ராஜா கூறியதாவது: சென்னை மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 20 ஐஸ் உற்பத்தியாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 500 ஐஸ் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ், ஆழ்கடல் மீனவர்களுக்கு கடல் உணவைப் பதப்படுத்தும் ஓர் அத்தியாவசிய பொருளாகும். இது தொடர்ச்சியாக இயங்க வேண்டிய இயந்திர செயற்பாடுகளை உடைய தொழில் ஆகும்.

ஆண்டுக்கு 8 மாதமே நடக்கும் தொழில்: மீன்பிடித் தடைக்காலம், கடல் சீற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் ஐஸ் உற்பத்தியில் ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு நேரடி பாதிப்புஏற்படுகிறது. மீதமுள்ள 8 மாதங்களில் கடலுணவு விற்பனைக்குத் தகுந்தவாறு ஐஸ் உற்பத்தித் தொழில் ஏற்ற இறக்கத்துடன் செயல்படும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு ஐஸ் உற்பத்தியாளர்களையும், மீன்பிடி தொழிலைச் சார்ந்தவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கெனவே, டீசல் விலை உயர்வால் ஐஸ் உற்பத்தி தொழில் பாதிப்படைந்து, நலிவடைந்து போய்க் கொண்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 8 மாதமே செயல்படும் ஐஸ் உற்பத்தி தொழிலுக்கு நிரந்தர கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல், உச்ச நேரக் கட்டணம் என்பது இத்தொழிலுக்கு எதிரானது. மீனவர்கள் தங்களுடைய கடல் உணவைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலையில் உச்ச நேர கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: எங்களுடைய கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனில், தமிழக அரசைக் கண்டித்து எங்கள்தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு ராஜா கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x