Published : 07 Oct 2023 07:48 AM
Last Updated : 07 Oct 2023 07:48 AM
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் முதல்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை நாளை (அக்.8) சென்னையில் சந்திக்கிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். டிக்கெட்கள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டன.
காவல் ஆணையர் ஆலோசனை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரிகள் குழுவினருடன் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்கெனவே ஆலோசித்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்காக சென்னையில் முதன்முறையாக ட்ரோன்களைப் பயன்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வானில் இரவிலும் படம் பிடிக்கும் வீடியோ உள்ள ட்ரோன்களைப் பறக்கவிட்டு, அதில் உள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி உள்ள அனைத்து சாலை சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் கையடக்க அதி நவீன 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டி தொடக்கம் முதல் முடியும்வரை போக்குவரத்து போலீஸார் கண்காணிக்க உள்ளனர். கிரிக்கெட் போட்டியைக் காண வரும்ரசிகர்கள், அவர்களின் வாகனங்களும் வீடியோவாகப் பதிவு செய் யப்பட உள்ளது.
இந்த காட்சிகள் அனைத்தையும் போலீஸ் அதிகாரிகள் தங்கள் செல்போனிலேயே பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் நாளை நடைபெற உள்ள கிரிக்கெட்போட்டி தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டு விட்டது. எந்தெந்த இடத்தில் யார்யார் பணியில் இருக்க வேண்டும்,எத்தனை பேர் இருக்க வேண்டும்,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகுறித்து தெளிவாக விளக்கப்பட்டுள் ளது.
மேலும் இந்த முறை, தேவைக்குத் தகுந்தாற்போல் ட்ரோன்களைப் பயன்படுத்துவோம். கிரிக்கெட் மைதான வளாகத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது, போக்குவரத்து காவல் சார்பில் கையடக்க நவீன கேமராக்களும் தற்காலிகமாக பயன்படுத்தப்பட உள்ளன.
காவல் ஆணையர் தலைமையில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து காவல்) ஆகியோர் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT