Published : 07 Oct 2023 06:15 AM
Last Updated : 07 Oct 2023 06:15 AM

டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் சாகுபடிக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை: எதிர்க்கட்சியாக இருந்தபோது, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க திமுக வலியுறுத்தியது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்தபின் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமேகொடுப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒழுங்காக வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே. விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து மக்களை தொடர்ந்துவஞ்சித்து வருகிறது திமுக அரசு.

பாமக நிறுவனர் ராமதாஸ்: காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடிய 40 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு என்று அறிவித்திருப்பது பெரும் கண்துடைப்பாகும். தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உரு வாகியுள்ளது.

குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரைஇழப்பீடு கிடைத்திருக்கும். அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: டெல்டா மாவட்டங்களில் நீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு அறிவித்த இழப்பீடு, ‘யானை பசிக்கு சோளப்பொறி’ போட்டது போல் இருக்கிறது. தமிழகத்தில் 1.5 லட்சம் ஏக்கருக்குமேல் குறுவை சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள் ளனர். அப்படியிருக்க, தமிழக அரசு அறிவித்துள்ள இந்த இழப்பீட்டு தொகை போதுமானதல்ல. ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.20 ஆயிரமாவது இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரைசெலவு செய்த நிலையில்தற்போது அறிவிக்கப்பட் டுள்ள இழப்பீடு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த இழப்பீடு தொகை அறிவிப்பு பயிரை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’ உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x