Published : 06 Oct 2023 09:15 PM
Last Updated : 06 Oct 2023 09:15 PM
மதுரை: ‘‘நல்ல பால் வழங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (அக்.7) முதல் தொடங்கவுள்ளோம்’’ என்று மதுரையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆவின் தொழிற்சாலையில் 8 மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: “ஆவின் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக இருந்த ஒவ்வொரு இடர்பாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டர் என்று இருந்ததை கடந்த 4 மாதங்களில் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளோம். ஆவின் நிறுனத்தின் விநியோக சங்கிலியை மேம்படுத்தியுள்ளோம். பாலின் தரத்துக்கேற்ற விலை நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு பால் லிட்டருக்கு ரூபாய் 3 முதல் 5 கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு பாலின் தரத்தை அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் தற்போது பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் கறவை மாடுகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிகளவிலும் தரமான வகையில் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த உற்பத்தி செலவை கருத்திற்கொண்டு பால் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல, ஆவின் பால் பாக்கெட்களை நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், கமிஷன் கேட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் செய்திடலாம். தகுந்த ஆதாரத்துடன் வரும் புகார்கள் மீது 100 சதவிகிதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக ரூ.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும். நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை 7-ம் தேதி தொடங்க உள்ளோம்.
தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் அதற்கான உற்பத்தியை தொடங்கி தாராளமாக வழங்கப்படும். ஆவினில் சென்ற மாதத்தில் 8 சதவீத விற்பனை உயர்ந்துள்ளது. படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனது வீடு திறந்தே தான் இருக்கும். பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தும் தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT