Published : 06 Oct 2023 09:04 PM
Last Updated : 06 Oct 2023 09:04 PM

“சந்திரயான்-3 நிலவில் 14 நாட்கள் மட்டுமே ஆராய வடிவமைக்கப்பட்டது” - இஸ்ரோ முன்னாள் இயக்குநர் தகவல்

சென்னை: திருவிடைமருதூர் வட்டம், நவகிரஹ கோயில்களில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயிலிலுள்ள உஷாதேவி - சாயாதேவி உடனாய சிவசூரியப் பெருமான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் 5 பேர் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி ஹரிஹரன் கூறியது: “நிலவில் 14 நாட்கள் மட்டுமே ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் சந்திரயான்-3 வடிவமைக்கப்பட்டது. அதன்படி 14 நாட்கள் வெற்றிகரமாக ஆய்வு நடத்தி அதன் பணிகளை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த சாதனைகள் மற்றும் ஆய்வுகள் குறித்து பாடப் புத்தகங்களில் வெளியிட மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் வளர்ச்சியையும், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் அறியும் விதத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கோள்களின் நிறங்கள் மற்றும் அதன் அமைப்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அறிந்து வரும் நிலையில், இதற்கு முன்பே மெய்ஞான ரீதியாக நமது முன்னோர்கள் இதனை எவ்வாறு அறிந்திருக்கிறார்கள் என்பது பிரமிப்பாக உள்ளது.

மெய்ஞானத்தின் வழிகாட்டுதலோடு விஞ்ஞானம் செயல்படுகிறது. மெய்ஞானத்தை மக்களிடையே வெளிக்கொண்டு வரவே தற்போது விஞ்ஞானம் முயற்சித்து வருகிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து, கும்பகோணம் கோட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x