Published : 06 Oct 2023 05:40 PM
Last Updated : 06 Oct 2023 05:40 PM

“அது ‘திட்டமிட்ட’ கருத்து... அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி” - அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கட்சி. எனவே, சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவ்வாறு கூறுகின்றனர்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி தரும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, முதல்வர் ஸ்டாலின் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளதை நிறைவேற்றித் தரும்படிதான் இடைநிலை ஆசிரியர்கள் கேட்கின்றனர். எனவே, அதை நிறைவேற்றுவது இந்த அரசினுடைய கடமை. காரணம், இவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் வழியாக நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினால், அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும், அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் என்றால், தொடர்ந்து பொய் வழக்குகளைப் போடுவதுதான், இந்த அரசினுடைய வாடிக்கையாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஒருகாலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்" எனறார்.

காவல் துறை வழக்குப் பதிவு செய்வதில் அடிக்கடி குளறுபடிகள் இருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஒட்டுமொத்தமாக இந்த அரசே குளறுபடியாகத்தான் இருக்கிறது. அரசு சரியாக இருந்தால்தானே, காவல் துறை சரியாக செயல்படும். தலைமை சரியாக இருந்திருந்தால், இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இடம் அளித்திருக்கமாட்டார்கள். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் இந்த செய்திதான் அதிகமாக இடம்பெறுகிறது. இந்த அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு. ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதல்வர் இந்த மாநிலத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது" என்றார்.

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர் அப்படி கூறினால், அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? இதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். மக்களிடம் சென்று கேளுங்கள், யாருக்கு யார் எதிரி என்று மக்கள் தெளிவாக கூறுவார்கள். அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கட்சி அதிமுக. எனவே, வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.

அப்போது, திமுகவுடன் யாருக்கு போட்டி என்று பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் போட்டி இருப்பதாக உதயநிதி கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "உதயநிதி மாய உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போது அதற்கு விடிவு காலம் பிறக்கும்" என்றார்.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் உங்களுடன் பேசி வருகின்றனரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒருபோதும் கிடையாது. அதிமுக ஏற்கெனவே தெளிவான முடிவை எடுத்து அறிவித்துவிட்டது. இந்தப் பத்திரிகை மற்றும் ஊடகங்கள்தான் ஏதாவது செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்காக தினமும் விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இன்றைக்கு இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள், அவர்களை கைது செய்கிறார்கள். இதுகுறித்து ஒரு விவாத நிகழ்ச்சியாவது நடத்தப்படுகிறதா? அரசின் மீதான அச்சத்தால் நடத்தப்படுவதில்லை. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, எப்படியெல்லாம் விமர்சனம் செய்தீர்கள். தவறுகளை நடுநிலையோடு, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்" என்றார்.

மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு," நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். பாஜகவினர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டை செப்.25-ம் தேதியே தெளிவுப்படுத்திவிட்டோம். தலைமைக் கழகத்தில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்து எங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டோம். தினந்தோறும் இதையே கேட்டால், எப்படி பதில் சொல்வது. எந்த விதத்தில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x