Last Updated : 06 Oct, 2023 05:53 PM

 

Published : 06 Oct 2023 05:53 PM
Last Updated : 06 Oct 2023 05:53 PM

அலைக்கழிக்கும் புதுச்சேரி மின்துறை: சோலார் மின்சாரத்துக்கு மாறிய பயனாளிகள் தவிப்பு

புதுச்சேரி: சிக்கலான நடைமுறை, மோசமான பில்லிங்என அலைக்கழிக்கும் புதுச்சேரி மின்துறையால், சோலார் மின்சாரத்துக்கு மாறிய பயனாளிகள் தவித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தியும் முறையாக செயல்படாமல் இருக்கும் அவலமும் நீடிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்துக்கு ஆண்டுதோறும் 3 ஆயிரத்து 6 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் மின் இழப்பு 13.5 சதவீதம். புதுச்சேரியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீட்டு உபயோக மின் இணைப்புகளும், 56,350 வர்த்தக பயன்பாட்டு இணைப்புகளும் உள்ளன. ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் 35,337 இணைப்புகளும், குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு 6.782 இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 530 மின் இணைப்புகளும் உள்ளன.

தற்போது புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. மின்கட்டணமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த கட்டண அதிகரிப்பும் முன்பை விட அதிகமாக உள்ளது. இதனால் சூரிய ஒளி மின்சாரத்துக்கான மாற்றத்தை நோக்கி சிலர் நகர தொடங்கினர்.

குடியிருப்பு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 கிலோ வாட்டுக்கு குறைவான மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனலுக்கு 40 சதவீதம் மானியமும், 3 முதல் 10 கிலோ வாட் மின்சாரம் உற்பத்திக்கு 20 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

‘2025-ம் ஆண்டுக்குள் யூனியன் பிரதேசத்தில் சூரிய ஆற்றல் ஒரு முக்கிய ஆற்றல் மூலமாக இருக்கும்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் புதுச்சேரி அரசு தனது சூரிய ஒளி மின் கொள்கையை மார்ச் 2016-ல் வெளியிட்டது. கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் (JERC) இந்த சூரிய ஒளி மின் கொள்கை அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும். அரசாங்கத்தின் சூரிய ஆற்றல் கொள்கை முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. சூரிய ஆற்றலுக்கு மாற்ற சோலார் பேனல் போடுவது உட்பட பலவற்றுக்காக லட்சக்கணக்கில் கணிசமான தொகையை இதில் பயனாளிகள் முதலீடு செய்தனர். சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் தற்போது வருத்தத்தில்தான் உள்ளனர். புதுச்சேரி மின் துறையின் சிக்கலான நடைமுறைகள், மோசமான பில்லிங், அலைக்கழிப்பு ஆகியவைகளே இதற்கு முக்கிய காரணம்.

இதுபற்றி பாதிக்கப்பட்டோர் கூறுகையில், "இத்திட்டத்தில் விண்ணப்பங்களை செயலாக்குவதில் அதிக தாமதம் ஏற்படுத்துகின்றனர். ஓரிரு நாளில் முடியவேண்டிய வேலையை பல மாதங்களுக்கு இழுத்தடிக்கின்றனர். பில்லில் அதிக முரண்பாடுகள் உள்ளதுடன் கணினியில் பில் வராமல் கையால் சரி செய்கின்றனர்.

சூரிய சக்தி உற்பத்தியாளர்களிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சக்தியை சரி செய்யாதது ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. வீட்டில் சோலார் அமைக்க முதலீடுசெய்தோம். நாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படும் சூரிய சக்திக்கான நிகர ஆற்றலுக்கு பில் வரவு வைத்து, அதற்கான மின் கட்டணத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மின் துறை அலுவலகம் சென்று பில் திருத்தம் செய்ய ரீடிங்கை காட்ட வேண்டும். ஆண்டுக்கணக்கில் இதுவே நடக்கிறது. இது மிகவும் ஏமாற்றம் தருகிறது.

கடந்த 2016-ல் வெளியிட்ட கொள்கைபடி, நெட்- மீட்டர் ரீடிங் தானாகவே செயல்பட்டு பில்லிங் வரும் என்றார்கள். இதற்காகதான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. ஆனால், பில்லிங் மென்பொருளை மாற்றம் செய்யாமல் உள்ளனர். தமிழகம் உட்பட இதர மாநிலங்களைப் போல் இங்கு செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பயனாளிகள் தானாக முறையாக அளவீட்டு பில்களை பெற முடிவதில்லை.

பில்லிங் முறை தரமாக இல்லை. வெளிப்படைத் தன்மையாகவும் இல்லை. முக்கியமாக சோலார் பேனல்கள் அமைத்தாலும் மாதாந்திர பில்கள் எங்கள் மின்கட்டணத்தை குறைக்கவில்லை. ஸ்மார்ட் மீட்டர் நிறுவியிருந்தாலும், பணியாளர்கள் நேரடியாக வந்து மீட்டர் அளவீட்டை அறிந்து செல்கின்றனர். இது தவறான நடைமுறை. பில்தொகையிலும் பிரச்சினை உள்ளது. சோலார் பொருத்தப்பட்ட இடங்களில் மின்சாரம் ஏற்றுமதி, இறக்குமதி விவரங்களை சேகரிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்பட்டன.

பில்லிங் மென்பொருளில் இறக்குமதி செய்யும் மின்சாரத்தின் அளவை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஏற்றுமதி செய்வதை அனுமதிப்பதில்லை. அதேபோல் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்திருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்தின் அடிப்படையில் மட்டுமே பெரிய தொகையை செலுத்த வேண்டியதாகவுள்ளது. புகார் தந்தாலும் கையால் மட்டுமே திருத்தும் முறை உள்ளது. " என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன தரப்பில் கூறுகையில், "சோலார் அமைத்தது வேதனையான அனுபவம். சோலார் அமைத்து பழைய மீட்டர் துண்டிக்கப்பட்டாலும், அடுத்த நான்கு மாதங்களுக்கு வழக்கமான மின் கட்டணத்தையும் தொடர்ந்து செலுத்த வேண்டியிருந்தது.

சோலார் பேனல்கள் நிறுவப்பட்ட பிறகும், மின்நுகர்வுக்கும், மீட்டர் கணக்குக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது. இதேநிலை தொடர்ந்தால் மத்திய அரசில் புகார் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x