Published : 06 Oct 2023 04:22 PM
Last Updated : 06 Oct 2023 04:22 PM

தமிழகத்துக்கு கோமாரி தடுப்பூசிகளை இன்னும் அனுப்பாத மத்திய அரசு - மாடுகளுக்கு நோய் தாக்கும் அபாயம்

மதுரை: பருவமழைக் காலத்தில் கோமாரி நோயை தடுக்க மாடுகள், கன்றுகளுக்கு போடப்படும் கோமாரி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு மத்திய அரசு இன்னும் அனுப்பாததால், மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவ மழை, வெயில் காலங்களில் மாடுகள், கன்றுகளை கானை நோய் என்னும் கோமாரி நோய் கடந்த காலத்தில் அதிகளவு தாக்கியது. இந்நோயை கவனிக்காமல், சிகிச்சை அளிக்காமல் விட்டால் மாடுகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இந்நோயால் மாடுகள் உயிரிழப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, மாடுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகளால் கால்நடைகளின் வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

அதனால், ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் மாடுகளுக்கும், 4 மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசிப் போடப்படும். தற்போது அக்டோர் கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட வேண்டிய தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்பதால், மாடுகளை இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், "கோமாரி நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் கால்களில் கொப்பளங்கள் ஏற்படும். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் தீவனம் உண்ண முடியாமல் கால்நடைகள் இறந்துவிடும். நோய் பாதித்த பால் கறக்கும் கறவை மாடுகளில் திடீரென பால் உற்பத்தி குறையும். தாயிடம் பால் குடிக்கும் கன்றுகள் இறந்துவிடும்.

மாடுகளுக்கு அதிக காய்ச்சல், பசியின்மை, மாடுகளின் வாயிலிருந்து உமிழ் நீர் நூல் போல தொங்கிக்கொண்டு இருத்தல், பாதிக்கப்பட்ட மாடுகள் காலை உதறிக் கொண்டு இருத்தல்,பிறகு நொண்டி நடத்தல், மாடுகளின் வாயில் கொப்பளங்கள், புண்கள் காணப்படுதல் போன்றவை கோமாரி நோயின் அறிகுறிகளாகும்.

கடந்த 10 ஆண்டாக இந்த நோயை தடுக்க மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் நோய் வருவதை தடுக்க போலியோ தடுப்பூசி எப்படி போடப்படுகிறதோ அதுபோல், கோமாரி முற்றிலும் ஓழிப்பதற்கான திட்டமாக இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த தடுப்பூசியை மாநில அரசு மாடுகளுக்கு போட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மத்திய அரசுதான் தமிழகத்துக்கான தடுப்பூசிகளை வழங்கி வந்தது. செப்டம்பர் மாதம் போடுவதற்கான தடுப்பூசி தற்போது வரை எந்த மாவட்டத்துக்கும் அனுப்பவில்லை” என்றார்.

மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மதுரை மட்டுமில்லாது எந்த மாவட்டத்துக்கும் இன்னும் கோமாரி தடுப்பூசி வரவில்லை. விரைவில் வந்ததும் போடப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x