Published : 06 Oct 2023 09:32 AM
Last Updated : 06 Oct 2023 09:32 AM
நாகர்கோவில் / திருநெல்வேலி / தென்காசி: குமரி மாவட்டத்தில் 4 நாட்களாக தொடர்ச்சி்யாக பெய்த கனமழை நின்று நேற்று இயல்பு நிலை திரும்பியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் பெய்த கனமழையில் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று மாவட்டம் முழுவதும் மழை நின்று வெயில் அடித்தது. மழையால் கடலுக்கு செல்லாத மீன்பிடி படகுகள் நேற்று கடலுக்குச் சென்றன.
நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, மங்காடு, தக்கலை, குலசேகரம் உட்பட பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த மழைநீர் வடியவில்லை. சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் சூழ்ந்த மழைநீர் அங்குள்ள கலையரங்கத்தில் நிரம்பி காணப்படுகிறது. சுசீந்திரம், நாகர்கோவில் உட்பட பல பகுதிகளில் வடிகால் ஓடைகளை முறையாக தூர்வாராததே இதற்கு காரணம்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 32.03 அடியாக இருந்தது. அணைக்கு 1,747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.30 அடியாக உள்ளது.
அணைக்கு 1,167 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.40 அடியாக உள்ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வருகிறது. 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.49 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.18 அடியாகவும் உள்ளது.
முக்கடல் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் 12.70 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 48 மிமீ மழை பதிவானது. ஆணைக்கிடங்கு 45, மயிலாடி 40, குருந்தன்கோடு 38, கொட்டாரம் 36, பூதப்பாண்டி 35, கோழிப்போர்விளை 32, தக்கலை 23, நாகர்கோவில் 21, அடையாமடை 17, புத்தன் அணை மற்றும் குளச்சலில் தலா 16, பாலமோர், கன்னிமார் மற்றும் குழித்துறையில் தலா 13, இரணியல் மற்றும் முக்கடலில் தலா 12 மிமீ., மழை பெய்திருந்தது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இங்குள்ள மாஞ்சோலையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 41 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிறஇடங்கள் மற்றும் அணைப்பகுதிகளில் மழையளவு (மி.மீட்டரில்): ஊத்து பகுதியில் 37, நாலுமுக்கில் 33, காக்காச்சியில் 25, பாபநாசம்- 22, சேர்வலாறு- 20, மணிமுத்தாறு- 2.2, அம்பாசமுத்திரம்- 2, களக்காடு- 2.2, தென்காசி மாவட்டம் குண்டாறு- 4.
பாபநாசம் அணை நீர்மட்டம் 95.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,895 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,354 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 52.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 294 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 83 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் 36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நிரம்பியிருப்பதால் அணைக்கு வரும் 91 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா நீர்மட்டம் 59 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 140 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 30 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 64 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 25 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT