Published : 06 Oct 2023 09:22 AM
Last Updated : 06 Oct 2023 09:22 AM
சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அரக்கோணம் தொகுதி திமுகஎம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார்எழுந்ததால், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை டத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.
இந்தச் சூழலில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவுக்கும் புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள ஆழ்வார் ஆய்வு மையம் அலுவலகம், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, கிண்டி கலைமகள் நகர் பாளையக்காரன் தெருவில் உள்ள நியூடெல்டா நிறுவன அலுவலகம், அடையாறு எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை உடன் அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலகத்தில், சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற 12 வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக ஜெகத்ரட்சகனின் வீட்டில் அதிகாரிகள் அங்கேயே தங்கியிருந்து விடிய விடிய சோதனை செய்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி மருத்துவமனை, வாலாஜாபாத் மதுபான ஆலை உள்ளிட்ட 30 இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்று நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT