Published : 10 Dec 2017 05:25 PM
Last Updated : 10 Dec 2017 05:25 PM
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஜாமீன் பெற்ற தஷ்வந்த் தன் தாயைக் கொலை செய்த வழக்கில் சிக்கி போலீசார் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டதாக காவல்துறை தரப்பு கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருந்தது. மகன் தஷ்வந்தும் தலைமறைவாகியிருந்தார். இதனால், தஷ்வந்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தது.
தஷ்வந்தை பிடிக்க போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஷ்வந்த் மும்பையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை விரைந்த போலீஸார் தஷ்வந்தை சூதாட்ட கிளப் ஒன்றில் வைத்துக் கைது செய்தனர். இவரை சனிக்கிழமையன்று சென்னை அழைத்து வந்தனர்.
அன்று முதல் உதவி கமிஷனர் சர்வேஷ் ராஜ் கண்காணிப்பில் தஷ்வந்த்திடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது இரும்புக் கம்பியால் தன் தாயாரை அடித்துக் கொன்றதாக தஷ்வந்த் ஒப்புக் கொண்டார்.
அவர் போலீஸிடம் கூறியதாக வெளியான தகவலில் பணம், நகை கேட்டதாகவும் தாயார் மறுத்ததாகவும் அதனால் அவரைக் கீழே தள்ளியதாகவும் தெரிவித்தார், மேலும் குழந்தையைக் கொலை செய்ததாக தாயார் தன்னை சாடியதாகவும் இதனால் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியை எடுத்து தாயார் தலை மற்றும் பிற பகுதிகளில் தாக்கியதாகவும் தெரிவித்தார். பிறகு பணம், நகைகளுடன் தனது சிறை சகாக்களான டேவிட் மற்றும் ராஜேஷுடன் நகரை விட்டு தப்பி ஓடியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார் தஷ்வந்த்.
ஞாயிறு காலை தஷ்வந்த் விசாரணை முடிவுக்கு வந்தது.
புழல் சிறையில் இன்று அடைக்கப்பட்டு, திங்களன்று அமர்வு நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்படுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT