Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM

பீதியை கிளப்பிய வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை: பெற்றோர் வற்புறுத்தலால் பள்ளிக்கு விடுமுறை

சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு செயலிழப்பு மாதிரி ஒத்திகையை பள்ளி நிர்வாகத்துக்குக் கூட தெரிவிக்காமல் போலீஸார் புதன்கிழமை திடீரென நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பயந்து போன பெற்றோரின் வற்புறுத்தலால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

எனினும், இதுபோன்ற அழைப்புகள் வெறும் மிரட்டலாக இருந்துவிடாமல், உண்மையாக இருக்கும் பட்சத்தில் போலீஸார் எவ்வாறு துரிதமாகச் செயல்படுவது என்பதற்காக ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை பெரம்பூர் செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் புதன்கிழமை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

செம்பியம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள பால வித்யாலயா என்ற பள்ளி அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காலையில் அங்கு ஆயத்தப் பணிகளை போலீஸார் மேற்கொண்டனர். அப்பள்ளியின் மழலையர் வகுப்பு சற்று தொலைவில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளை விடுவதற்காக அங்கு சென்ற பெற்றோர், வழக்கத்துக்கு மாறாக வாயிலில் போலீஸார் நிற்பதைப் பார்த்ததும் அச்சமடைந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கூறியதால் பெற்றோர் மத்தியில் பதற்றம் பீதியும் ஏற்பட்டது. குழந்தைகளை பள்ளியில் விட்டுத் திரும்பி சிறிது நேரமே ஆகியிருந்த நிலையில், இந்த தகவல், உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கும் பரவியது. இதனால் பள்ளியின் இரு வளாகங்களுக்கும் பெற்றோர் விழுந்தடித்து ஓடினர்.

பள்ளி வளாகங்களின் வாயிலில் நூற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டு தங்கள் குழந்தைகளை உடனே வெளியே அனுப்பவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

அங்கிருந்த போலீஸாரோ, அது வெடிகுண்டு ஒத்திகைதான் என்று பெற்றோரிடம் கூறினர். ஆயினும் பெற்றோர் சமாதானமடையவில்லை. அதனால், 9,10 உள்ளிட்ட சில வகுப்புகளைத் தவிர்த்து இதர வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அது பற்றிய எஸ்எம்எஸ் தகவல், பெற்றோருக்கு அனுப்பப்பட்டது. இது வேலைக்குச் செல்லும் பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. அவர்களும், பணிக்குச் செல்லும் வழியில் இருந்து வேகமாக திரும்பி வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “இந்த ஒத்திகையை உட்புறமாக உள்ள ஒரு பள்ளியில் நடத்த முடிவு செய்தோம். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றனர்.பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இது பற்றி தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், பெற்றோர் வற்புறுத்தியதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x