Published : 06 Oct 2023 06:03 AM
Last Updated : 06 Oct 2023 06:03 AM

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்: மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் தொமுச வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி, சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநர் க.குணசேகரனை தொமுசவின் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோ.மோகன்குமார், பொதுச்செயலாளர் த.சரவணகுமார், பொருளாளர் கி.சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் தொமுச நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநர் க.குணசேகரனை தொமுசவின் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோ.மோகன்குமார், பொதுச் செயலாளர் த.சரவணகுமார், பொருளாளர் கி.சீனிவாசன், பணிமனைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர். அவர்கள், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான கோரிக்கை மனுவையும் வழங்கினர்.

இது தொடர்பாக தொமுச நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து திமுக ஆட்சி அமைந்த பிறகு, கடந்த ஆண்டு ஆக.21-ம்தேதி அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் 14-வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆக.31-ம் தேதி நிலவரப்படி, ஊதிய ஒப்பந்தத்துக்கான காலம் முடிவுற்றதால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதன் பகுதியாக 15-வது ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் கூட்டுநர் என்ற முறையில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் கோரிக்கை மனுவைவழங்கியுள்ளோம். அதே நேரம், தொமுச சார்பில் அமைச்சரிடமும், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்கு நரிடமும்கோரிக்கை மனுவை வழங்கியுள்ளோம்.

குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் நாளில் பணப்பலனை வழங்க வேண்டும், கடந்தபேச்சுவார்த்தையின்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என நிர்ணயிக்கப்பட்ட கால அளவை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x