Published : 05 Oct 2023 09:53 PM
Last Updated : 05 Oct 2023 09:53 PM

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அக்.9ல் தர்ணா: மருத்துவர்கள் சங்கம் முடிவு

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்து விதமான ஆய்வுக் கூட்டங்களை புறக்கணிக்கவும், 9ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரிகளில் தர்ணா போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்தவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டர். இந்த கூட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத் நடந்து கொண்ட விதம் குறித்தும், மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்களுக்கும், மதுரை அரசு ராஜாஜி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் இடையே நீடிக்கும் சமீப காலமாக பிரச்சனைகள் பற்றியும், அதனை தொடர்ந்து நடந்து வரும் மருத்துவர்கள் போராட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மருத்துவர் சங்க நிர்வாகிகள் பேசிய பிறகு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மப்பேறு பிரிவில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பணிபுரிய விடாமல் தடுத்து, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வண்ணம் நடந்து கொண்டு மதுரை மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

* மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்து மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும்.

* வெள்ளிக்கிழமை (6ம் தேதி) முதல் தமிழக மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் தாய்சேய் தொடர்பான அனைத்து வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் வெளியேற முடிவு செய்வது.

* வெள்ளிக்கிழமை (6ம் தேதி) முதல் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் அனைத்து கர்ப்பிணிகள் இறப்பு தணிக்கை(Maternal Death Audit) ஆய்வு கூட்டங்களில் மருத்துவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது.

* அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து விதமான ஆய்வுக் கூட்டங்களையும் புறக்கணிப்பது.

* வரும் 9ம் தேதி திங்கள்கிழமை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தர்ணா போராட்டம் நடத்துவது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், ‘‘அனைத்துப் போராட்டங்களுக்கு பிறகும் சுமூகமான உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்தக் கட்டமாக போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். 9ம் தேதி திங்கள்கிழமை மாலை மாநில செயற்குழு கூட்டத்தை இதுபோல் கூட்டி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x