Published : 05 Oct 2023 08:20 PM
Last Updated : 05 Oct 2023 08:20 PM

'திமுக ஃபைல்ஸ்' கருத்தில் தவறு இல்லை: நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை விளக்கம்

சென்னை: திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14 அன்று ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக பொருளாளரும், திமுக எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார்.

ரூ.100 கோடி இழப்பீடு: அதையடுத்து டி.ஆர்.பாலு சார்பில் ரூ.100 கோடி இழப்பீடு கோரி அண்ணாமலைக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பாலு சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தாக்கல் செய்திருந்த மனுவில், ''கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி என பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக அண்ணாமலை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ரூ.10 ஆயிரத்து 841 கோடி மதிப்புள்ள 21 நிறுவனங்கள் தமக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியிருப்பது தவறானது, அவதூறானது. எனவே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவி்க்கும் வகையில் செயல்பட்ட அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டது.

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், அண்ணாமலை இரண்டாவது முறையாக ஆஜராகி இருந்த நிலையில், அவரிடம் டி.ஆர்.பாலுவின் வழக்கு குறித்து நீதிபதி அனிதா ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, டி.ஆர்.பாலு கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இதையடுத்து, அவதூறு வழக்கில் விசாரணையை தொடங்குவதற்காக, வழக்கை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினமும் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதாகவும், டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்காக டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜரானார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x