Published : 05 Oct 2023 02:22 PM
Last Updated : 05 Oct 2023 02:22 PM
சென்னை: "பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், வியாழக்கிழமை தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் பாஜக வெற்றிகரமாக அடியெடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இருக்கக் கூடிய இந்த 7 மாத காலம், அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பணிகள் இன்றைய கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு, பாஜகவைச் சேர்ந்தவர்கள் முழுமூச்சோடு, வேகத்தோடு, ஈடுபாட்டோடு களம் இறங்கி பணிபுரிய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
அதிமுக கூட்டணி குறித்து இந்தக் கூட்டத்தில் ஏதாவது விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே இருக்கிறது. அந்தக் கூட்டணியின் அடிப்படையில், என்னென்ன விஷயங்களை பாஜக கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்தக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்றார்.
மாநில கட்சியான அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டது. தேசிய கட்சியான பாஜக தனது முடிவை எடுப்பதற்கு காலதாமதமாவது என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் இப்போது சொல்லவேண்டிய விஷயங்கள் ஒன்றும் கிடையாது. பாஜகவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் வருகிறது. அதற்கு முன்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்து வருகிறது" என்றார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இதில் யாருக்கு முன்னடைவு, யாருக்கு பின்னடைவு என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. எங்களை வலிமைப்படுத்தக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக இந்த இரண்டு மாதங்களுக்கும் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT