Published : 05 Oct 2023 12:25 PM
Last Updated : 05 Oct 2023 12:25 PM
சென்னை: "ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட, நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT