Published : 20 Dec 2017 10:29 AM
Last Updated : 20 Dec 2017 10:29 AM

கனமழையால் சேதமடைந்த சாலைகள்நவீன தார் கலவை மூலம் சீரமைப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலைகளை, நவீன ‘கோல்டு மிக்ஸ்’ எனப்படும் தார் கலவை மூலம் சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. அதன் காரணமாக சென்னை யில் பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஒரே இரவில் டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை பதிவானது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் சாலையை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ‘கோல்டு மிக்ஸ்’ எனப்படும் நவீன தயார் நிலையில் கிடைக்கும் தார் கலவையைக் கொண்டு பழுதடைந்த சாலைகளில் உள்ள சிறு பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இதற்கு முன்பு வெப்ப தார் கலவை நிலையங்களில் இருந்து தாரையும், ஜல்லிக் கற்களையும் கலந்து லாரிகளில் கொண்டுவந்து, சாலைகளில் ஏற்படும் சிறு பள்ளங்களைச் சீரமைத்து வந்தோம். சிமென்ட் கலவையும் கொட்டப்படும். அதற்கு சாலை காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். மேலும் சாலையையும் தூசுகள் இல்லாத வகையில் வேகமாக காற்றை அடித்து சுத்தம் செய்யவேண்டி இருக்கும்.

ஆனால் தற்போது ‘கோல்டு மிக்ஸ்’ எனப்படும் நவீன தார் கலவையைப் பயன்படுத்தி சாலைப் பள்ளங்களைச் சரி செய்வது மிக எளிதாக உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

வெப்ப தார் கலவையைப் பயன்படுத்தும்போது, அதிக சத்த மும் காற்று மாசும் ஏற்படும். ஆனால் இதைப் பயன்படுத்த சூடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தார் கலவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. லாரியிலும் கொண்டுவர வேண்டியது இல்லை. சிறு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. சாலை ஈரமாக இருந்தாலும் இதைக் கொட்டி சிறு பள்ளங்களைச் சரி செய்ய முடியும். தரையோடு எளிதில் பற்றிக்கொள்ளும் வகையிலும், அதன் மீது வாகனங்கள் சென்றால் சிதறாமல் இருக்கும் வகையிலும் சில ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மழை பெய்துகொண்டிருக்கும் போதுகூட இதைப் பயன்படுத்த முடியும்.

இதற்காக மாநகராட்சி முழுவதும் ரூ.35 லட்சம் செலவிடப்பட உள்ளது. அந்தந்த மாநகராட்சி மண்டலங்களே ‘கோல்டு மிக்ஸ்’ தார் கலவையை வாங்கி பயன் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x