Published : 05 Oct 2023 06:13 AM
Last Updated : 05 Oct 2023 06:13 AM

ரூ.2 கோடி வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு கவனிக்காத மகள்கள்: முதியவரின் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் மனு அளித்த முதியவர் ராஜகோபால்.

சென்னை: ரூ.2 கோடி மதிப்புடைய வீட்டுடன் கூடிய நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு மகள்கள் தன்னை கவனிக்கவில்லை. எனவே, தான் எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என முதியவர் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜகோபால் (84)என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அதில், ‘‘வளசரவாக்கம், திருப்பூர் குமரன் தெருவில் ரூ.2 கோடி மதிப்பில் எனக்கு வீட்டுடன் கூடிய நிலம் இருந்தது. என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்து, எனது 5 மகள்கள் மற்றும் மருமகன்கள் அந்த இடத்தை தான செட்டில்மென்ட் பெற்றுக் கொண்டனர். தற்போது அவர்கள் உறுதி அளித்தபடி என்னை கவனிக்கவில்லை. எனவே, நான் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்துசெய்ய வேண்டும்’’ எனக் கூறி கண்ணீர் வடித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், முதியவர் ராஜகோபால் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களிடம் நேற்று 18 புகார் மனுக்களையும், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் 25 போலீஸாரிடமிருந்து மனுக்களையும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது துணைஆணையர் எஸ்.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) மற்றும்போலீஸார் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x