Published : 05 Oct 2023 06:10 AM
Last Updated : 05 Oct 2023 06:10 AM
சென்னை: ஏழை எளிய நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில் இந்த ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தேபாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு, இதுவரையில் 35 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 34 ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ‘ஏசி’ பெட்டிகளாகவும், சொகுசு ரயிலாக இருக்கின்றன. மற்ற விரைவு ரயில்களை ஒப்பிடுகையில், கட்டணமும் அதிகமாக இருப்பதாக பயணிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சித்தரஞ்சன் தொழிற்சாலை: இதற்கிடையே, சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களும் ‘வந்தே பாரத்’ போன்ற வசதிகளை பெற, முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் கூடிய சாதாரண் வந்தேபாரத் அல்லது அந்த்யோதயா வந்தேபாரத் என்ற பெயரில் இயக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2 சாதாரண் வந்தேபாரத் ரயில்கள் தயாரிப்பு பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தேபாரத் ரயில் போன்ற வசதிகளோடு சில மாற்றங்களை செய்து, சாதாரண் வந்தேபாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த ரயிலில்,தனியாக இன்ஜின்கள் இருபுறமும் பொருத்தப்படும். மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்கள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்த ரயிலில், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பிரிவில் 12 பெட்டிகள், மாற்றத்திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும். இந்த வகை ரயில் பெட்டிகள் தயாரிப்புபணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முதல் ரயிலை இந்த மாதஇறுதியில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, இந்த ரயிலை தயாரித்து ரயில்வேவாரியத்துக்கு தகவல் தெரிவிப்போம். எந்த ரயில்வே மண்டலத்துக்கு அனுப்புவது என்பது தொடர்பாக வாரியம் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT