Published : 04 Oct 2023 09:57 PM
Last Updated : 04 Oct 2023 09:57 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் 19 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு கூறியுள்ளது.
பாளையங்கோட்டை அருகே ஆரோக்கியநாதபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி நடைபெற இருந்த புதிய தமிழகம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது காரில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை- தூத்துக்குடி நெடுஞ்சாலையிலுள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது கார் சென்றபோது, திடீரென்று ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. கார் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு வேகமாக காரை ஓட்டிச் சென்றதால் டாக்டர் கிருஷ்ணசாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அப்போது பதற்றம் நிலவியது.
டாக்டர் கிருஷ்ணசாமியை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து மொத்தம் 15 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் வன்கொடுமைகள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 15 பேரில் சங்கர், திரவியம், மதன் ஆகிய 3 பேர் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் இன்று தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திருநெல்வேலி ராமையன்பட்டியை சேர்ந்த டி. சிவா என்ற சிவலிங்கம் (46), பி. லெட்சுமணன் (41), மூன்றடைப்பு அருகே பானான்குளத்தை சேர்ந்த எம். தங்கவேல் (53) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், உடமைகளை சேதப்படுத்துதல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2 ஆண்டு, எஸ்.சி. சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 19 ஆண்டுகளுக்குப்பின் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT