Published : 04 Oct 2023 08:49 PM
Last Updated : 04 Oct 2023 08:49 PM
மதுரை: “அதிமுக கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.1296 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணிகள் எந்த அளவு நடைபெற்று வருகிறது என தெரியவில்லை. மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் தலையிட்டு இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வசூல் பண்ணுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழாய் பதிப்பது தொடர்பாக 8000 முதல் 25 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனை கண்காணிக்க வேண்டும். முடிக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் பம்பிங் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அவசரகதியில் இந்த குடிநீர் திட்டப் பணிகளை செய்யக்கூடாது.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் பயன்பெறும். இதனால் வரும் 50 ஆண்டுகளுக்கு மதுரையில் தண்ணீர் பிரச்சினை இருக்காது. மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தங்கும் வசதிகளையும் அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் விளையாட்டு துறை அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள், அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியபோது “அதிமுக கூட்டணி குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதில்களை எங்களுடைய பொதுச் செயலாளர் தெரிவிப்பார்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT