Published : 04 Oct 2023 08:20 PM
Last Updated : 04 Oct 2023 08:20 PM
மதுரை: தென் தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மதுரை-தென்காசி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை, மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல், குன்னத்தூர், டி.கல்லுப்பட்டி, அழகாபுரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் போன்ற முக்கிய நகரங்களை கடந்து தென்காசி செல்கிறது. சுமார் 160 கிமீ., காணப்படும் இந்த சாலையில் மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சதுரகிரி மகாலிங்கம், தென்காசி காசி விஸ்வநாதர், பாபநாசம் போன்ற முக்கிய ஆன்மீக ஸ்தலங்களும், குற்றாலம் போன்ற சிறந்த சுற்றுலா ஸ்தலங்களும் உள்ளன.
குற்றால சீசனுக்கும், சபரிமலை சீசனுக்கும் இந்த சாலை வழியாகதான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கும், தென்காசிக்கும் சென்று வருகிறார்கள். இப்படி ஆன்மீகம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வந்தும், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படாமல் இரு வழிச்சாலையாக இருந்து வந்தது. எனினும், இந்த சாலையின் இரு புறமும் வழிநெடுக நிழல் தரும் மரங்கள் பசுமைப்போர்வை போல் ரம்மியமாக காணப்பட்டதால் இந்த சாலையில் பயணிப்பது பொதுமக்களுக்கு புத்துணர்வை தருவதாக இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடையநல்லூர், சங்கரன் கோயில் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை என்பதால் இது பீக் ஹவர் மட்டுமில்லாது நாள் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கும். அதனால், மதுரை திருமங்கலத்தில் இருந்து 160 கி.மீ., தொலைவில் உள்ள தென்காசிக்கு பஸ்சில் செல்வோர் 5.30 - 6 மணி நேரமும், காரில் செல்வோர் 4 - 5 மணி நேரமும் பயணம் செல்லும் நிலை உள்ளது. மதுரையில் இருந்து தென்காசி, கேரளா செல்வோருக்கு வேறு மாற்று சாலை வசதியில்லாததால் இந்த சாலையைதான் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும் இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காததால் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கும் சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாகவே இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் மட்டுமில்லாது, கேரளாவை சேர்ந்த மக்களும் வலியுறுத்தி வந்தனர். தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டநிலையில் இந்த கோரிக்கை இன்னும் வலுப்பெற்றது.
அதனடிப்படையில் இந்த சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 71.6 கி.மீ தொலைவிற்கு ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் இருந்து தொடங்கும் இந்த நான்கு வழிச்சாலை டி.கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வரை பை-பாஸ் சாலை வழியாக செல்கிறது.
ஆனால், இந்த சாலையை ராஜபாளையம் வரை மட்டுமே போடுவதால் எந்த பயனும் இல்லை. ராஜபாளையத்தில் இருந்து தென்காசி வரை இரண்டாம் கட்டமாக நான்கு வழிச்சாலை போடுவதற்கு நிலம் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் விரைவுப்படுத்தப்படவில்லை. ராஜபாளையம் - தென்காசி வரைதான் இந்த சாலை ஏராளமான குக்கிராமங்கள், நகரப்பகுதிகள் வழியாக செல்கிறது. அதனால், முக்கியமான இப்பகுதியில் நானகுவழிச்சாலை போட்டால் மட்டுமே தென்காசிக்கு செல்வோர் எளிதாகவும், விரைவாகவும் செல்ல முடியும்.
ராஜபாளையத்திற்கு பிறகு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கதாதால் இத்திட்டம் பாதியில் நிற்கும் அபாயம் உள்ளது. மதுரை-தென்காசி வரை முழுமையாக புதிய நான்கு வழிச்சாலை அமைத்தால் மட்டுமே, தென் தமிழகத்தையும், கேரளா மாநிலம் கொல்லத்தையும் இணைக்கும் முழுமையான சாலையாக இது அமையும்.
இதனிடையே, தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரையிலான பகுதியில் நான்குவழிச்சாலை போடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த நான்கு வழிச்சாலைக்காக இந்த சாலையில் பசுமைப்போர்வைபோல் காணப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. அதனால், இந்த சாலையில் தற்போது செல்வோர் வெட்ட வெளியில் பாலைவனத்தில் பயணம் செல்வதுபோல் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலட்சியத்தால் நடக்கும் பணியால் ஆபத்து: சாலை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நேரடி கண்காணிப்பில் நடக்காததால் தொழிலாளர்கள் பல இடங்களில் ஒரு வழிச்சாலையில் மட்டுமே போக்குவரத்தை அனுமதிகின்றனர். மேலும், சாலையோரம் 8 அடி ஆழத்திற்கு குழியும் தோண்டிப்போட்டுள்ளதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஒரு வழிச்சாலையில் ஒரு பஸ் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் வழிவிட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
மேலும், பருவமழை பெய்யும் நேரம் என்பதால் இரவு நேரத்தில் குழி எது, சாலை எது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு இல்லாதல் இந்த புதிய சாலைப்பணி அலட்சியமாகவும், அஜராக்கிரதையாகவும் நடப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT