Published : 04 Oct 2023 06:37 PM
Last Updated : 04 Oct 2023 06:37 PM
கடலூர்: “தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கின்றது” என்று நந்தனார் குரு பூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், மா.ஆதனூர் கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் இன்று (அக்.4) திருநாளைபோவார் நாயன்மார் என்கிற நந்தனார் குரு பூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11 மணி அளவில் மா.ஆதனூருக்கு வந்தார். பின்னர் அக்கிராமத்தில் உள்ள நந்தனார் கோயிலை பார்வையிட்டு அங்கிருந்த நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, ஆளுநருக்கு மேல தாளம் முழங்கிட பறை இசையுடன் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர், அதே பகுதியில் சிவ குலத்தமம் பூணூல் அணியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை ஆளுநர் ரவி துவக்கி வைத்தார். ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். தமிழ் சேவா சங்க நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்கவலர் ஞானசரவணவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி நாகராஜன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்டோர் பூணூல் அணிந்து கொண்டனர்.
இதில் ஆளுநர் ரவி பேசுகையில், "ஒரு சமுதாயத்தின் மீது சாதியக் கொடுமைகள் நடைபெறும் வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. பூணூல் அணியும் நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். இதில் நீங்கள் வேறு, நான் வேறு என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பிரிவுகளை மறந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும், நமது நாட்டின் பிரதமர், நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும், அனைத்து மக்களையும் தன்னுடைய சொந்த மக்களாக நினைத்து பாடுபட்டு வருகிறார். அனைவரையும் ஒரு குடும்பமாக நடத்தப்படுகின்றனர். இந்த சிந்தனை எங்கள் மகாகவி பாரதியார் உடையது. நம் நாட்டில் அனைவரையும் தம்முடைய குடும்பமாக பிரதமர் நடத்தி வருகிறார்.
இன்னொரு புறம் நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பாரதியார் வரிகள் போல இந்த நாட்டில் ஒரே குடும்பமாக குடும்பத்தினரை போல நாட்டின் வளர்ச்சிக்காகவும், உங்களுடைய வளர்ச்சிக்காக நாம் அனைவரும் கைகோத்து ஒரு குடும்பமாக செயல்பட்டு, அதனால் நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் அடைய முடியும்.
அதிகபட்ச வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை, தண்டிக்கப்படுவதில்லை. ஆகவே, இந்தக் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது. கேவலமாக, வன்மையாக கண்டிக்கத்தக்கக் கூடிய ஒரு குற்றச் செயல்தான் பாலியல் வன்கொடுமை. அந்தக் குற்றச் செயலில் ஈடுபவர்கள் 100 பேரில் வெறும் ஏழு சதவீதம் பேர் மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். தவிர மீதம் உள்ள 93 சதவீதம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள்.
மேலும், சாதிய வன்கொடுமைகள் எந்த அளவுக்கு மோசமாக சென்றுவிட்டது என்றால், தமிழகத்தில் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கின்றார்கள், நாங்குநேரியில் படிக்கின்ற 12 வயது மாணவரை நன்றாக படிக்கிறான் என ஆசிரியர்கள் பாராட்டியதன் காரணமாக மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களே, அந்த மாணவனின் வீடு சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த மாதிரி கொடுமைகள் தமிழகத்தில்தான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்காக தங்களுடைய சாதியின் அடிப்படையில் கலர், கலராக கயிறுகளை கையில் கட்டிக்கொண்டு தன்னை ஒரு மாணவரிடம், இன்னொரு மாணவர் மாணவர் இடத்தில் வித்தியாசப்படுத்தி கொண்டு வருகின்றனர். இது எந்த மாதிரியான கலாச்சாரம் என தெரியவில்லை. கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது.
நந்தனார் போல் உள்ள சிவபக்தர் விழாவில் கலந்து கொள்வது பாக்கியமாக கருதுகிறேன், மிகப் பெரிய முனிவர்கள் எப்பொழுதுமே ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து தான் தோன்றியிருக்கின்றார்கள். உலகத்தை தோற்றுவித்த பிறகு உலகில் உள்ள ஒவ்வொரு அசைவிலும் ஆண்டவர் இருக்கின்றார். நமது அனைவரின் உள்ளத்திலும் கடவுள் இருக்கின்றார். நாம் எத்தனை வகையாக இருந்தாலும், தனித் தனியாக நம்முடைய பிரார்த்தனை முறைகள் வேறுபட்டு இருந்தாலும், நம் அனைவருடைய உள்ளங்களிலும் கடவுள் ஒருவர் எல்லாருடைய மனதிலும் கூடியிருக்கின்றார்.
வேதத்தில் நம்மில் யாரும் தாழ்ந்தவர்களோ, உயர்ந்தவர்களோ அல்ல. நாம் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எல்லா பகுதிகளிலும் அதாவது இந்தப் பாகுபாடு, இந்தப் பிரிவினை உள்ளது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வுகளை கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக இருக்கின்றது. காரணம், இந்த சமுதாயத்தில், மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது இத்தனை சாதிய வன்கொடுமைகள் திணிக்கப்படுவதை நினைக்கும்போது உண்மையிலேயே மனம் வேதனை அடைகிறது.
பொருளாதாரம், ஒற்றுமையில் பாகுபாடு என்று இது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரிவினரை ஆலயத்துக்குள் பிரவேசிக்க தடை செய்யப்பட்டு வருகின்றது. இதைபார்க்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது. இந்த மாதிரி செயல் எங்களுடைய இந்த சனாதன தர்மத்திலோ அல்லது இந்து மத தர்மத்திலோ இல்லை" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்நிகழ்வில் தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் மாறன் நாயகம், சிதம்பரம் சுவாமி சகஜானந்தர் பேரன் ஜெயச்சந்திரன். புனிதா இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...