Published : 04 Oct 2023 04:07 PM
Last Updated : 04 Oct 2023 04:07 PM
சென்னை: கடந்த 1987-ல், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட அமைதிப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட, டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதலில் ஊழல் செய்ததாக அப்போதைய ராணுவ மேஜர் ஜெனரலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1987-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரை நிறுத்தும் நோக்கில், இந்தியாவில் இருந்து அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, அமைதிப்படை வீரர்களுக்காக உணவுப் பொருள்கள் சப்ளை செய்வதற்கான குழுவில் மேஜர் ஜெனரல் ஏ.கே.குப்தா அங்கம் வகித்தார். அவர், அமைதிப்படை வீரர்களுக்கு வழங்கிய டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மேஜர் குப்தாவை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.கே.குப்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள அஹமத்நகருக்கு அழைத்துச் சென்றபோது மேஜர் குப்தா தப்பிச் சென்றதை வைத்து, சிபிஐ நீதிமன்றம், வெறும் யூகங்களின் அடிப்படையில், எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மேஜர் குப்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்வதாகக்கூறி தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT