Published : 04 Oct 2023 02:52 PM
Last Updated : 04 Oct 2023 02:52 PM
சென்னை: சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர் எம். முனுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அனைவருக்கும் சமமாக சென்றடையும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்திருந்தேன். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழணை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது. எனவே, இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டனர்.
மேலும், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், மனுதாரர் இது தொடர்பாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT