Published : 04 Oct 2023 01:26 PM
Last Updated : 04 Oct 2023 01:26 PM
எடப்பாடி: "தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதுபோல், பாஜகவுக்கு 20 இடங்கள் வேண்டும், 15 இடங்கள் வேண்டும் என்றெல்லாம் அவர்களும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அதை மறுபரிசீலனை செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "அது அவர்களின் விருப்பம். ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். சேலம் மாநகர், மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியிலேயே நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். 25.9.23 அன்று, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனடிப்படையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக்கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் அடிப்படையில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது" என்றார்.
அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. வாக்களித்தப் பிறகுதான் முடிவு தெரியும். எங்களைப் பொறுத்தவரை, அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
காரணம், சிதம்பரம் தொகுதியில் 324 வாக்குகள்தான் குறைவு. ஈரோட்டில் 7800 வாக்குகள்தான் குறைவு.நாமக்கல்லில் 15,400 வாக்குகள்தான் குறைவாகப் பெற்றோம். இந்த மூன்று தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எங்களது வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 20ஆயிரம் வாக்குகள், வேலூரில் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் என 10 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிவாய்ப்பை இழந்தோம்.
காஞ்சிபுரத்தில் 42,000, கடலூரில் 50,000, இப்படி பல நாடாளுமன்ற தொகுதிகளில் 50,000 வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்று 10 தொகுதிகளிலும் வெற்றியை இழந்தோம். ஒருலட்சத்துக்கும் குறைவாகப் பெற்று 7 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். எனவே, எங்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிவாய்ப்பு இருக்கிறது. எனவே, 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.
கடந்த இரண்டரை ஆண்டுகாலத்தில், தமிழகத்தில் மிகமோசமான மக்கள்விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 தேர்தலின்போது, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் 524 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டார். ஆனால், 10 சதவீத அறிவிப்புகளைக்கூட நிறைவேற்றவில்லை. ஆனால்,ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பச்சைப் பொய்யை சொல்லி வருகிறார்.
இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் மின்கட்டணம், வீட்டுவரி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம். எனவே, இத்தேர்தல் எங்களது தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக்கு மிகமிக சாதகமாக இருக்கும்" என்றார்.
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக அழுத்தம் கொடுத்ததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதா? என்ற கேள்விக்கு, "அது தவறான செய்தி. எங்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, அது தவறான செய்தி என்று ஏற்கெனவே கூறிவிட்டார். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.
பாஜகவில் மத்தியில் உள்ள தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடி உட்பட யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்திவிட்டது. ஒரு கட்சி வளமாக செழிப்பாக தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். அவர்கள் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும். தலைவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது.
எனவே, எங்களது தொண்டர்களின் உணர்வுகளை மதித்துத்தான் நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். பாஜக சார்பில் இடங்கள் ஒதுக்கீடு குறித்தும் பேசவில்லை. ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் இதுதொடர்பான செய்திகள் தவறானவை. பாஜகவுக்கு 20 இடங்கள் வேண்டும், 15 இடங்கள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எந்த கோரிக்கையும் வைக்கவும் இல்லை. அதுகுறித்து பேசவும் இல்லை.
அதேபோல, தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுக கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துகளும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். எனவே, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறும். அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT