Published : 04 Oct 2023 12:05 PM
Last Updated : 04 Oct 2023 12:05 PM

69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிஹார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. ஒடிசாவில் மே 1 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதிபதி ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்துக்குள்ளாக தாக்கல் செய்யும்; அதன்பின் அதன் விவரங்களும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதியைக் காப்பதற்கான ஒடிசா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

சமூகநீதியின் தொட்டில் தமிழகம் தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியுள்ளன. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்படி கடந்த 44 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும், அதை செய்ய சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வரவில்லை.

பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்கும் நிலையில், அதுகுறித்து தமிழக அரசோ, தமிழகத்தை ஆளும் திமுகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

சமூகநீதி சார்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம் தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒடுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய தடையாக இருப்பது எது என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான தடைகள் எவையாக இருந்தாலும் அவற்றை உடைத்து தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிறப்பிப்பார் என்று நம்புகிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x