Published : 04 Oct 2023 05:31 AM
Last Updated : 04 Oct 2023 05:31 AM

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்துவோரை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற 2 நாள் மாநாடு தொடங்கியது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாநாட்டு முதல் நிகழ்வின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் இலக்கு. அடுத்தது, பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது. அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்பு உள்ளது. அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

கள்ளச் சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழித்து, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது கவலையளிக்கிறது.

இந்த நிலையை மாற்ற, காவல், நெடுஞ்சாலை, போக்குவரத்து துறைகள் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுககு சிரமம் தரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் கூடாது.

பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, மக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப், தொலைபேசி எண்ணை ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில், தூத்துக்குடி விஏஓ லூர்துபிரான்சிஸ், திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்குகளில் போலீஸார் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.

தற்போது, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணி்ப்பாளர்கள், அவற்றை தொடர்ந்து கண்காணித்து, பொய்ச் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடும்,மாலையில் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐ.ஜி.க்கள், பல்வேறு பிரிவுகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடும் நடைபெற்றன.

ஐபிஎஸ் அதிகாரிகள் உடனான மாநாட்டின் நிறைவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ‘‘சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுதான் ஒரு அரசின் மிக முக்கியகடமை, சாதனை. டிஐஜிக்கள் மாதம்ஒருமுறையும், ஐ.ஜி.க்கள் 2 மாதம் ஒருமுறையும் அனைத்து வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.நிலுவையில் உள்ள அனைத்து பிடியாணைகளையும் நிறைவேற்றி, சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போரை கைது செய்து, தேவைப்பட்டால் குண்டர்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் 7, 8 மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த காலகட்டத்தில் காவலர் முதல் காவல் துறை உயர் அதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும்’’ என்றார்.

மாநாட்டில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

2-வது நாளான இன்று, ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது.

— M.K.Stalin (@mkstalin) October 3, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x