Published : 04 Oct 2023 06:01 AM
Last Updated : 04 Oct 2023 06:01 AM
சென்னை: அதிமுக - பாஜக இடையேயான பிளவை சரிசெய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். இந்த பின்னணியில் கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் வரவுள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இண்டியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைக்கவும், கூடுதலாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் பாஜக தலைமை வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை எனக் குற்றம்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக வெளியேறியது.
இந்த கூட்டணி முறிவை அதிமுக மற்றும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு விரும்பினாலும், மற்றொரு தரப்பினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணியில் அதிமுக வெளியேறியது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டணியில் உள்ள சில கட்சிகளை சேர்ந்தவர்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் சேலத்தில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொண்டர்களின் முடிவு என்று பழனிசாமி தெரிவித்திருந்தார்.
மீண்டும் கூட்டணியில் இணைய அதிமுக தலைமை சம்மதம் தெரிவிக்காத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோரை சந்தித்து பேசுவதற்கு பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் அதிமுகவும், நாம் தமிழர் கட்சி மற்றும் பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பாஜக இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் கொண்டு வந்து கூட்டணியை பலப்படுத்தவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், திமுக கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், பாஜக தலைமை அழைப்பின்பேரின் டெல்லி சென்ற அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், மக்களவைத் தேர்தல், கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது ஆகிய அம்சங்கள் குறித்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, “அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும், பிளவை சரிசெய்ய பெரியவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள்” என்றார்.
பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, “கூட்டணி குறித்து தேவையான நேரத்தில் பதில் அளிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில், நேற்று கோவையில் அரசு நிகழ்சிகளில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக சந்தித்ததாகவும், கூட்டணி பற்றி பேசவில்லை என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தாலும், இச்சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நாளை ஆலோசனை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால், நேற்று சென்னையில் நடைபெற இருந்த கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரத்தில், நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் நாளை சென்னை அமைந்தகரையில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT