Published : 04 Oct 2023 05:49 AM
Last Updated : 04 Oct 2023 05:49 AM

தமிழகத்தில் ஓராண்டில் 479 பிரசவ உயிரிழப்புகள்: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில் பேறு கால மரணங்களைத் தடுக்க பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மட்டும் இல்லாமல், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தை உறுதி செய்யும்சிறப்பு திட்டங்களும் நடைமுறைப்படுகின்றன. இதனால், பிரசவ காலஇறப்புகள் குறைந்தாலும், முற்றிலும் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டுஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டுமார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த பேறுகால உயிரிழப்புகளுக்கான காரணங்களை பொது சுகாதாரத் துறை ஆய்வு செய்தது. அந்தஆய்வின் முடிவில், ஓராண்டில்479 உயிரிழப்புகள் ஏற்பட்டிருப் பதும், முக்கிய காரணமாக தலா20 சதவீதம் உயர் ரத்த அழுத்தம், அளவுக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதும் தெரியவந்தது.

அடுத்தபடியாக 10 சதவீத இதய பாதிப்புகள் ஆகும். அதேபோல், நரம்புசார் பாதிப்புகளாலும், ரத்தகிருமித் தொற்று காரணமாகவும் தலா 9 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த கர்ப்பிணிகள் 7 சதவீதமாகவும், கருக்கலைப்பின் போது 5 சதவீதமும், கல்லீரல் பாதிப்புகளால் 4 சதவீத இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவது இயல்பானது. அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தவறும் போதுதான் அதன் தீவிரம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும். அது ஒரு கட்டத்தில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும். ஹீமோகுளோபின் அளவை சரிவர பராமரித்தால் ரத்தப்போக்கு ஏற்படும்போது அதனை சரிசெய்ய முடியும்.

இவ்வாறாக பேறு காலத்தில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளையும், மருத்துவர்களின் பரிந்துரைகளையும் பின்பற்றி நடந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x