Published : 04 Dec 2017 09:45 AM
Last Updated : 04 Dec 2017 09:45 AM
நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் தலா 500 ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பு தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.
உலகளவில் பண்ணை மீன் வளர்ப்பு தொழிலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய கடலோர மாநிலங்கள் வளர்ப்பு மீன் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன. தமிழகத்தில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் ஹெக்டர் பரப்பில் பண்ணை மீன் வளர்ப்பு தொழில் மேற்கொள்ளப்படுகிறது. கடலுக்கு மிக நெருக்கமாகவும் உப்புத் தன்மை அதிகமாகவும் உள்ள இடங்களில் உவர்நீர் மீன் வளர்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. இதில் இறால் ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைப்பதால் இறால் வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பண்ணை மீன் வளர்ப்பு முறையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், இந்த தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மீன் வளர்ப்பு பண்ணைகள் அதிகமாக உள்ள நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு சார்பில் மீன் வளர்ப்பு தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஃபெலிக்ஸ், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
இந்தியாவில் பண்ணை மீன் வளர்ப்பு தொழிலில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இறால் ஏற்றுமதியில் தமிழகம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இறால் ஏற்றுமதி சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கடல் சார் உணவுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப உற்பத்தியை அதிகரித்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதேசமயம், பண்ணை மீன் வளர்ப்பு முறையை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி, சரியான தொழில்நுட்ப அறிவுடன் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும்.
இதன் அடிப்படையில், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் தலா 500 ஏக்கர் பரப்பில் தமிழக அரசு சார்பில் மீன் வளர்ப்பு தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், பண்ணை மீன் வளர்ப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT