Published : 18 Dec 2017 09:58 AM
Last Updated : 18 Dec 2017 09:58 AM
தை மாதத்தில் பொங்கல் பண்டிகை நாட்களின்போது தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி களைகட்டும். ஆனால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை அரசே நடத்துவதால் ஜல்லிக்கட்டுக்கு மதுரைதான் பிரபலம். அதுவும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது.
கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. கடந்த ஆண்டும் வழக்கம்போல உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதிருப்தியடைந்த அலங்காநல்லூர் ஊர் மக்கள் வாடிவாசல் முன் அமர்ந்து, ‘‘வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மாணவர்கள் பொதுமக்கள் களமிறங்கி போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தின. மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு, மலேசியாவிலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் அளவுக்கு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனால், இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என்பதால், தற்போதே அரசும், உள்ளூர் மக்களும் விழா ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருக்கும் மேடையைத் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் இந்த ஆண்டு 250 காளைகள் ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தப்படுகின்றன. பொதுவாக ஜல்லிக்கட்டில் புலிக்குளம், உம்பலாச்சேரி, காங்கேயம் போன்ற நாட்டு இனக் காளைகள்தான் அதிகளவு களமிறக்கப்படும். தாய்ப்பால் மறந்த 3 முதல் 6 மாத கன்றுக்குட்டிகளை வாங்கி போட்டியாளர்கள் ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்துகிறார்கள். இந்தக் காளைகளை உழவு உட்பட மற்ற எந்த வேலைகளுக்கும் உரிமையாளர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
களத்தில் பார்வையாளர்கள் கூச்சலையும், அடக்க பாயும் இளைஞர்களையும் அஞ்சி ஓடாமல் இருக்க மணலை மலைபோலக் குவித்து அதில் கொம்புகளை கொண்டு காளைகளை குத்த விடுவது, விவசாயத் தோட்டங்களில் மரத்தில் கட்டிப் போட்ட காளைகளுடைய திமிலைப் பிடித்து தொங்குவது என எப்போதும் காளைகளை சீற்றத்துடன் வைத்திருக்க, தினமும் கடும் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்தக் காளைகள் ஜல்லிக்கட்டு விழா அன்று இளைஞர்களை பந்தாடுவதை மாட்டின் உரிமையாளர்கள் பெருமிதமாக கருதுவர். அதேவேளையில் மாடு பிடிபட்டு விட்டால், அந்த மாட்டை உடனே விற்றுவிட்டு அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு புது காளையை வாங்கி தயார்படுத்துவர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரத்தில் ஜன. 14-ம் தேதியும், அடுத்து பாலமேட்டில் ஜன.15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதுகுறித்து அலங்காநல்லூரில் மயிலைக் காளையை வளர்க்கும் கோவிந்தராஜ் கூறியதாவது: ‘‘ஜல்லிக்கட்டு காளைக்கு நிறம் முக்கியம் இல்லை. நல்லா பாயுற கன்றுக்குட்டிகளை எடுத்து வளர்ப்போம். எப்படி ஒரு வீட்டுல துருதுருனு யாருக்கும் பயப்படாமல் சேட்டை செய்யும் குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்குமோ, அதுபோலத்தான், துருதுருன்னு இருக்கும் காளைகளையும் பிடிக்கும். தினமும் பருத்தி விதை, துவரம் தூசி, உளுந்தம் குர்ணா, வைக்கோல், கடலைச் செடிகளை கொடுப்போம்” என்று அவர் கூறினார்.
ஒரு ஜல்லிக்கட்டு காளை ரூ.3 லட்சம்
அலங்காநல்லூர் கால்நடை அரசு மருத்துவர் மெரில்ராஜ் கூறியதாவது: ‘‘மாணவர்கள் போராட்டத்துக்கு பிறகு ஜல்லிக்கட்டை போல நாட்டு காளைகளுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. கன்றுகள் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. திடகாத்திரமான காளைகள் ரூ.3 லட்சம் வரை விலை போகின்றன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு காளைகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்தலாம். அந்த காளைகள் நல்ல வளர்ச்சியடைந்த திமிலுடனும் 4 அடி உயரம் அல்லது 120 செ.மீ. வரை இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளில் நாட்டுக் காளையினங்களே சிறந்தவை. ஜல்லிக்கட்டு காளை வாங்கணும், அதை வளர்க்கணும் என்ற ஆர்வம் கடந்த காலத்தைவிட பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால், தாய்ப்பால் மறந்த 2 மாதம், 3 மாதம் ஆன நாட்டுக் காளை கன்றுகளும், காளையினங்களும் சந்தைகளுக்கு செல்வதற்கு முன்பே விற்று விடுகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT