Published : 03 Oct 2023 09:58 PM
Last Updated : 03 Oct 2023 09:58 PM

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: "அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பின் 2 தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்றும், நாளையும் சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இன்று (அக்.3) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும் சாதனையும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாகக் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒரு சாமானியர் தன்னுடைய புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடுகின்றார் என்றால், அந்த நம்பிக்கையினைக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். பெறப்படும் அனைத்து புகார்களும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அனைத்து காவல்துறை ஆணையர், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து அதிக மனுக்களோ அல்லது திரும்பத் திரும்ப ஒரே பொருள் குறித்து தொடர்ந்து மனுக்கள் வரும் நிலையில் அந்தக் காவல் நிலையங்களுக்கு நீங்களே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து அதனுடைய பிரச்சனையை புரிந்து, அதனை முழுமையாகத் தடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சட்டம் – ஒழுங்கு மற்றும் சாதி உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளில் கவனமுடன், மாவட்ட நிர்வாகத்திற்குக் கீழான அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும். ஃபோக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் காவலர் முதல் காவல்துறை உயரதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து வரவேண்டும். அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x