Published : 03 Oct 2023 03:46 PM
Last Updated : 03 Oct 2023 03:46 PM
கோவை: "தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை. இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது" என்று அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கோவையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (அக்.3) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தென்னை விவசாயிகள் சார்பில் அவரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது: "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்ற மாதம் ஏற்கெனவே டெல்லியில் சந்தித்து, தென்னை விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தோம். அந்த மனு குறித்து வலியுறுத்துவதற்காக நானும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஆகியோர் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தோம்.
தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக எங்களது மனுவை மீண்டும் கொடுத்தோம். இந்தச் சந்திப்புக்கு வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்துபோய் கிடக்கின்றன. விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல், தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில அரசிடம் பலமுறை கடிதம் வழியாகவும், நேரடியாகவும் தெரிவித்தோம். ஆனால், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாகத்தான் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எல்லாம் பேசவில்லை.
நாங்கள் வந்ததற்கு காரணம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை, உள்ளிட்ட எங்களுடைய பகுதி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. எனவே, மத்திய அரசின் உதவியை கோரி மத்திய அமைச்சரை சந்தித்தோம். இங்கு நடந்த விழாவிலும் இதைத்தான் நான் பேசினேன். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார். அதற்காக நான் இங்கு வரவில்லை. ஒரு தொகுதி எம்எல்ஏ என்ற அடிப்படையில், மக்களின் பிரதான பிரச்சினை இது. எனவே, அவர்களுடைய கோரிக்கையை தெரிவிப்பதற்காக வந்தோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, கோவையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பின்பேரில், அதிமுக எம்எல்ஏக்கள் அங்கு சென்றிருந்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT